துப்புரவுப் பணியாளர்களுக்கு விருந்தளித்து நன்றி தெரிவித்த ஊர்மக்கள்!

ரங்கிப்பேட்டையில், ஊரை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவும் துப்புரவுப் பணியாளர்களைக் குதூகலப்படுத்தும் வகையில், பிரியாணி விருந்தளித்து  உபசரித்துள்ளனர். 

துப்புரவு பணியாளர்களுக்கு விருந்து

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, தமிழகத்திலேயே தூய்மையான ஊர்களில் ஒன்று. பரங்கிப்பேட்டை பஞ்சாயத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களின் அயராத உழைப்பினால், பரங்கிப்பேட்டை தூய்மையாகக் காணப்படுகிறது.  தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஊரை சுத்தப்படுத்தும் பணியில் சிரத்தை எடுத்து பணிபுரியும் அவர்களின் குடும்பத்தினரைக் குதூகலப்படுத்த விரும்பிய பரங்கிப்பேட்டை ஊர் மக்கள், விருந்தளிக்க முடிவுசெய்தனர். 

துப்பரவு பணியாளர்களுக்கு விருந்து

மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. நிகழ்ச்சியில், பரங்கிப்பேட்டை பஞ்சாயத்து அலுவலர்களும் கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களின் பணியைப் பாராட்டினர். பரங்கிப்பேட்டை பஞ்சாயத்து சுகாரதார ஆய்வாளர் நடராஜன், துப்பரவுப் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள், துயரங்களை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்  பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில், தூய்மைப் பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. விருந்து நிகழ்ச்சிக்கு, 'தர்மம் செய்வோம்' அமைப்பு ஏற்பாடுசெய்திருந்தது. 

 பணியாளர்களுக்கு மக்கள் பாராட்டு

சமீபகாலங்களில், துப்புரவுப் பணியாளர்களை மரியாதைக்குறைவாக நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பரங்கிப்பேட்டை மக்கள்  விருந்தளித்து நன்றி தெரிவித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ''நமது ஊரை, சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தும்  பணியாளர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருந்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணியில் ஈடுபடுவார்கள். ஏனென்றால், அவர்கள்  செய்யும் பணிகளை நம்மால் செய்ய முடியாது'' என்கிறார்கள் பரங்கிப்பேட்டை மக்கள்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!