Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேல்முறையீடு செய்த தஷ்வந்த்! - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 10

Chennai: 

ஹாசினி வழக்கு மிகக் குறைந்த நாள்களுக்குள் அதிவிரைவாக விசாரிக்கப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பைப் பொதுமக்களும், பெண்கள் நல அமைப்புகளும் வரவேற்றன.

குறிப்பாக, பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இதை வரவேற்றார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தஷ்வந்துக்குத் தூக்குத் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மிகவும் சரியானதும், வரவேற்கத்தக்கதுமாகும். தஷ்வந்த் செய்த செயலை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதைக்கிறது. தாயின் சகோதரனாகவோ, தந்தையின் நண்பனாகவோ நினைத்து நம்பிவந்த பால்மணம் மாறாத ஆறு வயது சிறுமியைச் சீரழித்து, சிதைத்த கொடிய பாவியை மன்னிப்பதோ, குறைந்த தண்டனையுடன் விடுவிப்பதோ நீதியாக இருக்காது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பைச் சட்டப்படி நீதிமன்றம் நிறைவேற்றியிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

ஹாசினி

தஷ்வந்த் மீது, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் இரு பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, குற்றவாளிக்குத் தண்டனைப் பிரிவு 363-ல் பெற்றோரிடமிருந்து குழந்தையைக் கடத்துதல் என்ற பிரிவின்கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், பாலியல் துன்புறுத்தலுக்காகக் குழந்தையைக் கடத்திய குற்றத்துக்காக 366-ன்கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், குழந்தையை மானபங்கப்படுத்திய குற்றத்துக்காக 354-பி பிரிவின்கீழ், 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தடயங்களை மறைக்க முயற்சி செய்தமைக்காகப் பிரிவு 201-ன்கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. ஆக, மொத்தம் 31 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், அரசியல் சட்டத்தின் 302-வது பிரிவின்கீழ் கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

தஷ்வந்த்

அது மட்டுமல்லாமல், குழந்தைகள் பாலியல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 6-ன்கீழ் 10 ஆண்டுகளும், பிரிவு 8-ன்கீழ் 5 ஆண்டுகளும் என 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதும் செய்தியாளர்களிடம் பேசிய ஹாசினி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன், “குற்றவாளி தஷ்வந்த் மீது இந்தியத் தண்டனைப் பிரிவின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட 5 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதாகத் நீதிபதி தெரிவித்தார். இந்தத் தீர்ப்பால் அரசு மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பு நிம்மதியடைந்துள்ளனர். இந்த வழக்கில் மேல்முறையீட்டுக்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு செய்தால், குற்றவாளி தரப்பு வாதத்தைப் பொறுத்து எங்கள் வாதத்தை முன்வைப்போம். இந்தத் தீர்ப்பின்மூலம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை ஒரு சாதாரணமான தீர்ப்பாக எடுத்துக்கொள்ளாமல், நீதிமன்றம் விரைந்து விசாரித்து உச்சபட்ச தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக, தஷ்வந்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக அவனுக்காக வாதாடிய வழக்கறிஞர் ராஜ்குமார், “தஷ்வந்துக்கு எதிரான தீர்ப்பைத் தொடர்ந்து அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். மேல்முறையீடு செய்வது அடிப்படை உரிமை என்பதால், அரசே மேல்முறையீடு செய்யும். மரண தண்டனை என்பதால் வழக்கைப் பரிசோதனை செய்ய, உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். இந்த வழக்கையும் மேல்முறையீட்டு வழக்கையும் சேர்த்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும். விசாரணையின் அடிப்படையிலேயே தீர்ப்பை நிறைவேற்றுவது குறித்து நீதிபதிகள் முடிவு செய்வார்கள். அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படும். கீழ் நீதிமன்றத்தில் விசாரித்ததுபோலவே உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கவும் தமிழக அரசே அனைத்து வசதிகளையும் செய்து தரும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஹாசினி போன்ற ஓவியம்

பின்னர் அவரிடம், “நீதிபதி வழங்கிய மரண தண்டனைக்குப் பிறகு தஷ்வந்த் எப்படி இருக்கிறார்... மரணம் குறித்து பயந்திருக்கிறாரா...கழிவிரக்கத்தில் கலங்கியிருக்கிறாரா” எனக் கேள்வி எழுப்பினோம். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் ராஜ்குமார், “கலங்கிப்போவதும் கழிவிரக்கம் கொள்வதும் தன் தவறுகளை நினைத்து வருந்தும் ஆள்களுக்குத்தான் வரும். தன்னால் இவ்வளவு கெட்ட விஷயங்கள் நடந்துவிட்டதே என்று மனம் வருந்தி, குறைந்தபட்சம் சாப்பிடப் பிடிக்காமலாவது தஷ்வந்த் இருந்திருந்தால், அவன் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான் என்று சொல்லலாம். பொதுவாக, மரண தண்டனை தீர்ப்பு அல்லது கடுமையான ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட குற்றவாளி கதறி அழுவார்.

ஆனால், தஷ்வந்த் முகம் தெளிவாக இருந்ததாக ஒரு பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அதையே நானும் சொல்ல விரும்புகிறேன். தனக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டதும், அடுத்து அப்பீல் செய்வது தொடர்பான பரபரப்பில் மூழ்கிவிட்டான் தஷ்வந்த். தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் வெளியே வரும்போது, கையில் ஒரு பேப்பர் இருந்ததைப் பார்த்தீர்களா? அது, அந்தத் தீர்ப்பின் நகல் (Copy). அடுத்து, அப்பீல் செய்வதற்கான நடவடிக்கையில் அவன் அப்போதே இறங்கிவிட்டான். ‘தஷ்வந்துக்காக இவரே அப்பியர் ஆவார். இவரே கிரிட்டிசைஸ் பண்ணுவார்’ என்றெல்லாம் சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். லீகல் ஃபார்மாலிட்டிக்காக... அரசு சொன்னதால்தான், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு தஷ்வந்த் கேஸில் என் கடமையைச் செய்தேன். அவன் சார்பாக ஒரு லாயர் ஆஜராகாமல் தீர்ப்புக் கொடுக்க முடியாது என்பதுதான் சட்டம். மற்றபடி, எனக்கும் மனம் நிறைய வேதனை இருக்கிறது” என்றார் சற்றே வருத்தத்துடன்.

வழக்கறிஞர் கண்ணதாசன்

“இந்த வழக்கு மேல்முறையீடு செய்யும்பட்சத்தில், அதிலிருந்து குற்றவாளி தப்பிக்க ஏதேனும் சாத்தியங்கள் இருக்கிறதா” என ஹாசினி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம்... “இந்த வழக்கைப் பொறுத்தவரை, இதில் நேரடிச் சாட்சிகள் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைச் சாட்சிகள் மட்டுமே இருக்கின்றன என்று எதிர்தரப்பு சொல்கிறது. ஆனால், இதுபோன்ற அறிவியல்பூர்வமாக உறுதிசெய்யப்பட்ட வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘மேல் முறையீடு செய்வோம்’ என்று சொல்வது அவர்களுடைய உரிமை. இதில், எந்தக் கருத்தும் நாம் சொல்ல முடியாது” என்றார். 

இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டுக்குத் தாக்கல் செய்திருக்கிறான், தஷ்வந்த். இது ஒருபுறமிருக்க... மறுபுறம், ஹாசினியின் தந்தையான ஶ்ரீனிவாஸ் பாபுவை மிரட்டியதாக வழக்கு ஒன்றும் அவர்மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஹாசினியின் குடும்பம்தான் மிகவும் கவலையில் இருக்கிறது. தன்னுடைய குழந்தையை இழந்து வாடும் அந்தக் குடும்பம் அடுத்து, மேல்முறையீட்டைச் சந்திக்கக் காத்திருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement