`ஐ.பி.எல் வீரர்களுக்கு எதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல!'- எச்சரிக்கும் வேல்முருகன்

``சென்னையில் உள்ள ஐ.பி.எல் வீரர்களுக்கு எதாவது ஆசம்பாவிதங்கள் நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல'' என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

வேல்முருகன்

கடந்த 7-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, சென்னையில் நடக்க உள்ள ஐ.பி.எல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் எனப் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ``காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் உணர்வுபூர்வமான போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவே சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சென்னை வந்துள்ள ஐ.பி.எல் வீரர்கள் வெளியில் செல்லும்போது அவர்களுக்கு எதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. தமிழர்களின் உணர்வுகளை கிரிக்கெட் வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சென்னை அணியில் உள்ள தமிழ் தெரிந்த வீரர்கள் தமிழகத்தில் நடக்கும் நிலை குறித்து மற்ற வீரர்களிடம் சொல்லி விளங்க வைக்க வேண்டும். தமிழகத்தில் போட்டிகள் நடத்தக்கூடாது எனப் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளது கண்டிக்கத்தக்கது. நாளை ஐ.பி.எல் போட்டி நடக்கும் சென்னை மைதானத்தை முற்றுகையிடத் திட்டமிட்டுள்ளோம். எங்கள் தொண்டர்கள் ரசிகர்கள்போல் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை முற்றுகையிடுவார்கள். ஐ.பி.எல் ஒரு சூதாட்டம். போட்டியை நிறுத்தாவிட்டால் அதில் நடக்கும் மொத்த ஊழலையும் வெளியில் கொண்டுவருவோம்” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!