மேகமலையில் புலிகள் கணக்கெடுப்பு! - வன விலங்கு ஆர்வலர்கள் புறக்கணிப்பு | Tiger census started - wild animal activist are not allowed

வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (09/04/2018)

கடைசி தொடர்பு:14:33 (09/04/2018)

மேகமலையில் புலிகள் கணக்கெடுப்பு! - வன விலங்கு ஆர்வலர்கள் புறக்கணிப்பு

புலிகள் கணக்கெடுப்பில் புறக்கணிக்கப்படும் வன விலங்கு ஆர்வலர்கள்.!

புலிகள் கணக்கெடுப்பு

இந்தியா முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ள சூழலில், தேனி மாவட்டத்தில் இன்று முதல் வரும் ஞாயிறு வரை மாவட்ட வனப் பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. முன்னதாக, வனத்துறை அதிகாரிகள் தலைமையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக யானை, பறவை, புலிகள்  கணக்கெடுப்பு  நடைபெறும்போது, வனத்துறையுடன் வன விலங்கு ஆர்வலர்களும் இணைந்துகொள்வர்.  ஆனால், இந்தமுறை நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பின்போது, வனவிலங்கு ஆர்வலர்கள் கலந்துகொள்ள வனத்துறை அனுமதி மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய வனவிலங்கு ஆர்வலர் ஒருவர், ‘’வனத்துக்குள் நடக்கும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு, வனத்தை மேம்படுத்த உதவும். இந்த வகையில், இந்தியா முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில், புலிகள் அதிகமாகக் காணப்படுவது மேகமலை வனப்பகுதியில்தான். மேகமலை வன உயிரினக் காப்பகத்தை புலிகள் காப்பகமாக மாற்ற வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கனவு. அதற்கான பரிந்துரையை தமிழக வனத்துறை, இந்திய வனத்துறையிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த வகையில், மேகமலையில் நடக்கும் புலிகள் கணக்கெடுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால், கணக்கெடுப்புப் பணியில் இணைந்துகொள்ள நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம். ஆனால், தற்போது அதற்கான அனுமதியை வனத்துறை அதிகாரிகள் தர மறுக்கிறார்கள். இந்தச் சம்பவம் எங்களை அதிர்ச்சியடையச்செய்தது மட்டுமல்லாமல், பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேகமலையில் புலிகள் கணக்கெடுப்பு

மேகமலையில் மட்டும் 12 புலிகள் இருக்கின்றன. குட்டிகளுடன் இரண்டு பெண் புலிகள் உள்ளன. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இந்தச் சூழலில், மேகமலையில் நடக்கும் புலிகள் கணக்கெடுப்பில் குளறுபடிகளை செய்து, புலிகள் காப்பகத்தை வரவிடாமல் செய்யவே வனத்துறை எங்களைப் புறக்கணிக்கிறதோ என்று அச்சப்படுகிறோம்’’ என்றார்.

மேகமலை வன உயிரினக் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், அதன் கணக்கெடுப்புப் பணியில் வன விலங்கு ஆர்வலர்களைப் புறக்கணிக்க என்ன காரணம் என மேகமலை வன உயிரினக் காப்பாளர் ராம் மோகனைத் தொடர்புகொள்ள முயன்றோம், பலனில்லை. வனத்துறை உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, உடனடி தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.