`பிரச்னை தீரும்வரை கொடியை இறக்கப்போவதில்லை!’ - காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் முழங்கிய தி.மு.க-வினர்

தஞ்சாவூரில், தி.மு.க கொடிக்கம்பத்தில் காவிரி மீட்புப் பயணத்தின் கொடியை ஏற்றிவைத்து,  காவிரி உரிமை மீட்பு 3-ம் நாள் நடைப்பயணத்தை மு.க .ஸ்டாலின் தொடங்கினார்.  `'காவிரிப் பிரச்னை தீரும் வரை அந்தக் கொடியை இறக்க மாட்டோம்'' என தி.மு.க-வினர் தெரிவித்தனர்.

காவிரி உரிமை மீட்பு நடைப்பயணம்

மு.க.ஸ்டாலின், கடந்த 7-ம் தேதி காவிரி உரிமை  மீட்பு நடைப்பயணத்தை திருச்சி முக்கொம்பில் இருந்து துவக்கினார். அன்று மாலை கல்லணையில், அணைக்கு உள்ளே அமைக்கப்பட்ட மேடையில் பொதுகூட்டம் நடத்தினார்.

பின்னர் தஞ்சாவூரில் ஓய்வெடுத்தவர், நேற்று (8-ம் தேதி) சூரக்கோட்டையிலிருந்து  தொடங்கி, கல்லணைக் கால்வாய் ஓரத்திலேயே அமைந்துள்ள பல ஊர்களுக்கு நடந்துசென்றார். பிறகு, பட்டுக்கோட்டையில் தன் கட்சித் தொண்டரான கலியபெருமாள் என்பவர் வீட்டில் மதிய உணவை முடித்த பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் பயணத்தைத் தொடங்கி முடித்தார்.

காவிரி உரிமை மீட்பு நடைப்பயணம்

இன்று காலை 9 மணியளவில், தஞ்சாவூர் அன்னப்பன் பேட்டையில் 3-ம் நாள் பயணத்தைத் தொடங்கினார். அப்போது, ஸ்டாலின் கொடி ஏற்றவதற்காக தி.மு.க கொடிக்கம்பத்தில் பறந்த தங்கள் கட்சிக் கொடியை இறக்கிவிட்டு, காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் கொடியான நடப்போம், குரல்கொடுப்போம், மீட்டெடுப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய கொடியைத் தயார்செய்து வைத்திருந்தனர். 

வெடிச்சத்தம் முழங்க அன்னப்பன் பேட்டைக்கு வந்த ஸ்டாலின், அந்தக் கொடியை ஏற்றினார். அப்போது, ஸ்டாலினைப் புகழ்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

உதயநிதி

பின்னர், மீண்டும் நடக்கத் தொடங்கிய ஸ்டாலினுடன் முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணனும் நடந்தார்கள். முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ள இடத்தில், திருவாடுதுறை ஆதீனம் சாமிநாதன் தம்பிரான், சந்தன மாலையை ஸ்டாலின் கழுத்தில் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

கொஞ்சம் தூரம் மட்டுமே நடந்த உதயநிதி, பின்னர் பிரசார வாகனத்தில் ஏறிக்கொண்டதோடு, ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்தபடி அனைத்தையும் பார்த்தபடி சென்றார். பள்ளி மாணவர்கள் சிலர் உதயநிதியிடம் ஆட்டோகிராப் கேட்டு, உதவியாளரிடம் அடம்பிடித்தார்கள். அவர், மாணவர்களிடம் நோட்டை வாங்கி, வேனுக்குள் இருந்த உதயநிதியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொடுத்தார். பின்னர் மெலட்டூர், திருக்கருக்காவூர்,சாலியமங்கலம்,அம்மாபேட்டை போன்ற ஊர்களுக்குச் சென்றார்.

நடைப்பயணத்தில், மத்திய மாநில அரசுகளைக் கடுமையாகக் காய்ச்சி எடுத்தார் ஸ்டாலின். இன்றைய நடைப்பயணத்தில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் கலந்துகொள்வார் என அறிவித்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. தி.மு.க கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் கொடி, காவிரிப் பிரச்னை தீரும் வரை இறக்கப்போவதில்லை என தி.மு.க-வினர் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!