`ஸ்கீம் பற்றி தற்போது கூற முடியாது' - தமிழக அரசு தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு மே 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம், தமிழகத்துக்கு கர்நாடகாவிலிருந்து 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும், ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுவே, காவிரி விவகாரம் தொடர்பான இறுதித்தீர்ப்பு எனவும் இதை எதிர்த்து யாரும் மேல் முறையீடு செய்ய இயலாது என்றும் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில் கர்நாடகாவில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த 6 வாரம் கால அவகாசம் நிறைவடைந்தும் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழக மக்கள் மற்றும் அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது எனப் பல கருத்துகள் வந்த வண்ணம் இருந்தன. மத்திய அரசைக் கண்டித்தும் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசின்மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது, அதே சமயம் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்த ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையின் விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடுதல் அவகாசம் கேட்டும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த இரு வழக்கின் விசாரணையும் இன்று நடைபெற்றது. 

இதை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விசாரித்தார். அப்போது ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் என நாங்கள் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கியிருந்தோம். ஸ்கீம் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது. ஒவ்வொரு நேரத்திலும் நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறினார். மேலும், காவிரி வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மே மாதம் 3-ம் தேதி விசாரிக்கப்படும் எனக் கூறி ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!