Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`ஆம்லேட்டில் உப்பு இல்லை!' - புதுச்சேரி கேன்டீன் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

ஆம்லேட்டில் உப்பு இல்லாததால், புதுச்சேரியில் உள்ள பார் கேன்டீன் ஒன்றில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, திருபுவனை. அதன் அருகில் உள்ள ஆண்டியார்பாளையம் எனும் கிராமத்தில், கேன்டீனுடன்கூடிய தனியார் பார் இயங்கிவருகிறது. அங்கு, விழுப்புரத்தைச் சேர்ந்த இருவர் மது குடிக்கச் சென்றிருக்கின்றனர். மது குடித்த அவர்கள், போதையில் அங்கிருந்த கேன்டீன் ஊழியரிடம் ஆம்லேட் கேட்டிருக்கின்றனர். ஆம்லேட் கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில், அதில் உப்பு இல்லை என்று அந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதையடுத்து அவர்களுக்கு வேறு ஆம்லேட் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஆம்லேட்டில் உப்பு அதிகமாக இருப்பதாக மீண்டும் தகராறு செய்தனர். அப்போது, பார் கேன்டீன் ஊழியர்களுக்கும் அவர்களுக்குமான மோதல் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, “எங்களிடமே உங்கள் வேலையைக் காட்டுறீங்களா? நான் யார் என்று உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று சொன்ன அந்த இருவரும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பினர். பிரச்னை முடிந்தது என நினைத்த கேன்டீன் உரிமையாளர்கள், போலீஸிடம் இதுகுறித்து புகார் எதையும் அளிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் மீண்டும் பாருக்குச் சென்ற அந்த நபர்கள், பார் மற்றும் கேன்டீன்மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். பயங்கர சத்தத்தோடு வெடித்த அந்தக் குண்டுகளால் பாரில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அந்த நேரத்தில், அங்கு மது குடித்துக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தொடர்ந்து வீசப்பட்ட நான்கு வெடிகுண்டுகளில் ஒன்றைத் தவிர மற்றவை பயங்கர சத்தத்துடன் வெடித்தன. அதனால், அந்தப் பக்கம் சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களும் அலறியடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தனர். இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதும், அந்தப் பகுதியை பரபரப்பாக்கியது.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார், வெடிக்காத அந்தக் குண்டை பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுதினர். அதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்தனர். அதில், நாட்டு வெடிகுண்டுகள் வீசும் காட்சிகள் பதிவாகியிருந்தன. நாட்டு வெடிகுண்டை வீசியது, விழுப்புரம் கோலியனூரைச் சேர்ந்த பிரபா, ரவுடி தீனா என்றழைக்கும் தினகரராஜ் மற்றும் எல்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த சுகுமார் என்பதும் தெரியவந்திருக்கிறது. அதேபோல, தீனா மீது ஏற்கெனவே குண்டாஸ், கொலை, கொள்ளை உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். அதையடுத்து, அவர்கள் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது போலீஸ்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement