காவிரி மேலாண்மை வாரியம் கோரி ச.ம.க தொண்டர் தீக்குளிக்க முயற்சி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சமத்துவ மக்கள் கட்சித் தொண்டர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தொண்டர்கள் பிடித்து தீ வைக்க விடாமல் தடுத்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சமத்துவ மக்கள் கட்சித் தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தொண்டர்கள் பிடித்து தீ வைக்க விடாமல் தடுத்தனர்.

காவிரி வாரியம் கோரி தீக்குளிக்க முயற்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரக்கூடிய போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் களத்தில் இறங்கிப் போராடி வருகிறார்கள். மாணவர்களிடமும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. அத்துடன், அரசியல் கட்சியினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர மாவட்டம், நெல்லை கிழக்கு, நெல்லை மேற்கு மாவட்ட ச.ம.க சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர மாவட்டச் செயலாளர் சேவியர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மேற்கு மாவட்டச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுடன் பெத்தநாடார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் வந்திருந்தார்.

ரயில் நிலையம் முன்பாக கோஷங்கள் எழுப்பப்பட்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ், மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை  தலை வழியாக ஊற்றினார். அதன் பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டபடியே தீக்கொளுத்த முயன்றார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!