Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`ஒரே பிரச்னையா இருக்கு; இங்க வராதீங்க!’ - சுரேஷ் ரெய்னாவின் நெல்லைப் பயணம் ரத்து

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, நெல்லையில் உள்ள கல்லூரி விழாவில் பங்கேற்க இருந்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது. 

சுரேஷ் ரெய்னா நிகழ்ச்சி ரத்து

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ரத்துசெய்ய வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்துவருகிறது. சென்னையில் நாளை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு வருடங்களுக்குப் பின்னர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில், இரண்டு வருடங்களுக்குப் பின்னர் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதால், இந்தப் போட்டிகளுக்கு கிரிக்கெட் ரகிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார். நடுவரிசை மட்டையாளரும் ஆஃப்-ஸ்பின் பௌலருமான ரெய்னாவின் ஆட்டத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள ராஜா பொறியியல் கல்லூரியில், சுரேஷ் ரெய்னா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் ஏற்பாடுசெய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ரெய்னா பங்கேற்று, கிரிக்கெட் தொடர்பான விளக்கங்களை அளிப்பார் என்றும், மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், ஐபிஎல் போட்டிகளுக்கு வேல்முருகன் தலைமையிலான தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்துக்குள் ரசிகர்கள் போல தங்கள் கட்சித் தொண்டர்கள் செல்வார்கள் என்றும், மைதானத்துக்கு வெளியே செல்லக்கூடிய வீரர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் எனவும் வேல்முருகன் வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.

திடீர் ரத்து

இந்தநிலையில், சென்னையிலிருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வருகைதந்து, அங்கிருந்து கார் மூலமாக வடக்கன்குளம் செல்லும் வழியில் சுரேஷ் ரெய்னாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், அவரை இந்த விழாவுக்குச் செல்ல வேண்டாம் என கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்து, வடக்கன்குளம் ராஜா கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியை அவர் ரத்து செய்தார். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், ''இந்த நிகழ்ச்சியைத் தள்ளிவைத்திருக்கிறோம். சுமுக நிலைமை ஏற்பட்டதும், மீண்டும் ரெய்னாவை அழைத்துவருவோம்’' எனத் தெரிவித்தனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement