வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (09/04/2018)

கடைசி தொடர்பு:15:50 (09/04/2018)

`சித்தராமையாவுடன் பேசத் தயார்'- சொல்கிறார் திருநாவுக்கரசர்

கர்நாடக காங்கிரஸ் கட்சியை எப்போது குற்றம் சொல்லலாம், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விளக்கம்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில், காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஊட்டியில் நிருபர்களிடம் பேசுகையில், ``தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுரையின் பேரில் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திருநாவுக்கரசர்

காவிரி நதி நீர் ஒப்பந்தம் 1974-ல் முடிந்த பிறகு, மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன. அதைத்தொடர்ந்து காவிரி நதி நீர் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. அது புதுப்பிக்கப்பட்டதும்கூட. அதற்குப்பிறகு பல்வேறு வழக்குகள் நடந்தன. நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இது 4 மாநிலங்கள் தொடர்புடைய பிரச்னை என்பதால், உடனுக்குடன் தீர்ப்பு வந்தது. பாதிக்கப்பட்டதாகக் கருதிய மாநிலங்கள் ஒவ்வொன்றும் உச்ச நீதிமன்றத்தை நாடின. இதன் அடிப்படையில் சுமார் 25 ஆண்டுகள் வழக்கு நடந்தது. மேல்முறையீடு செய்ய முடியாதபடி இறுதித் தீர்ப்பு வந்தது. அதில் 6 வார காலத்துக்குள்ளாக காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை மத்திய அரசே மதிக்கவில்லை, நிறைவேற்றவில்லை என்றால், நாளை மாநில அரசுக்கு எதிராக ஒரு தீர்ப்பு வரும் பட்சத்திலோ, மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகவோ உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கினால் அதைப் பின்பற்றுவார்கள், செயல்படுத்துவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளுடன் இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இறுதியாக ஆளுநரிடம் மனு கொடுக்க இருக்கிறோம். இதில் காங்கிரசை குற்றம் சொல்வது சரியல்ல. காங்கிரஸ் கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ளது. கடந்த காலத்தில் மத்தியிலும் கர்நாடகத்திலும் பா.ஜ.க. 6 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது இப்பிரச்னைக்கு தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கலாமே. எப்போது கர்நாடக அரசின் மீது குற்றம் சொல்லலாம் என்றால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்து, அதிலே சொல்லப்பட்ட சரத்துகளை கர்நாடக அரசு நிறைவேற்றத் தவறினால் குற்றம் சொல்லலாம். அந்தந்த மாநிலங்கள் அதன் உரிமைக்காக போராடி வரும் சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை  நிறைவேற்ற பொதுவாக  இருந்து செயல்பட வேண்டிய மத்திய அரசு செயல்படாமல், உத்தரவை நிறைவேற்றாமல், இருக்கிறபோது, மாநிலத்தில் இருக்கிற கட்சி மற்றும் முதல்வர்களைப் பற்றிப் பேசுவதில் அர்த்தம் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றட்டும், பிறகு மாநில அரசு அதன் உத்தரவுகளை நிறைவேற்றத் தவறினால், நாங்களும் சித்தராமையா, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரிடம் பேசத் தயாராக உள்ளோம்,” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க