'எந்த ரெய்டுக்கும் அஞ்ச மாட்டேன்'- தமிழிசைக்கு சவால்விடும் சத்யராஜ்

ஐ.டி ரெய்டு வந்தால் அவர்கள் பயப்படுவது தெரியும் என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை பேசியதற்குப் பதில் அளித்து பேசிய சத்யராஜ்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை  அறவழிப் போராட்டம் நடந்தது. போராட்டத்தின் முடிவில் நான்கு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய தீர்மானத்தை ஃபெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி வாசித்தார். ரஜினி, கமல், நாசர், விஷால், செல்வமணி, சத்யராஜ், விக்ரம் என அனைவரும் மேடையில் இருந்த நிலையில், கூட்டத்திலிருந்த சிலர் சத்யராஜ் பேச வேண்டும் என்று முழக்கமிட்டதால் அறவழி ஆர்ப்பாட்டக் களம்  சற்று பரபரப்பானது. அப்போது சத்யராஜ் பேசினார். ``காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம், குரல்கொடுக்கத் தைரியம் உள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள்; இல்லையேல், ஒளிந்துகொள்ளுங்கள்"  என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.   

சத்யராஜ்

இதுகுறித்து சென்னை வேளச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் தமிழிசை, "ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம் என நடிகர் சத்யராஜ் பேசுகிறார். ஐ.டி ரெய்டு வந்தால் அவர்கள் பயப்படுவது தெரியும்." என்றார். இது பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதைத் தொடர்ந்து சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளுக்குச் செல்லக் கூடாது என வலியுறுத்தி  இன்று இயக்குநர்கள் பாரதிராஜா, சேகர், அமீர், செல்வமணி, சத்யராஜ் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சத்யராஜ், "உண்மையான களப்போராளிகளுக்குப் பின்னால் இருக்கவே ஆசைப்படுகிறேன். நான் எல்லா விளையாட்டுக்கும் ஆதரவானவன்தான். ஆனால், காவிரிக்காக போராட்டம் நடந்துவரும்போது ஐ.பி.எல் வந்தால் சரியிருக்காது. எந்த ஐ.டி ரெய்டுக்கும் நான் அஞ்சமாட்டேன்" என்று தமிழிசை கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், கலைஞர்கள்  இணைந்து தமிழர் கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!