வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (09/04/2018)

கடைசி தொடர்பு:17:40 (09/04/2018)

`இருதரப்புக்கும் திருப்தி அளிக்கும்வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு

 சமரச மையத்தில் நீதிபதி பேச்சு


"தீர்ப்பு இரு தரப்பினருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். இதற்கு சமரச மையம் உதவியாக இருக்கும். இது குறித்த விழிப்பு உணர்வை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்" என மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன் பேசினார்.

கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச மையம் குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.நம்பிராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் த.அன்பழகன் முன்னிலையில் இன்று (9.4.2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பேசிய முதன்மை நீதிபதி நம்பிராஜன், "தமிழ்நாடு சமரச மையம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது. வழக்கு தரப்பினர்கள் தம் எதிர் தரப்பினருடன் பேசி சமரசம் செய்துகொள்ள ஏதுவாக நீதிமன்றம் இங்கு வழக்குகளை அனுப்புகிறது. இந்தச் சமரச மையங்களில் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட சமரசர்கள், வழக்கு தரப்பினர்கள், சுமுகமாக வழக்குகளை முடித்துக்கொள்ள உதவுவார்கள். நீதிமன்றம் வழங்கும் இந்தச் சேவைக்கு வழக்கு தரப்பினர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை. தனிப்பட்ட முறையில் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்த தனி அறைகள், காத்திருக்க இடவசதி முதலியன சமரச மையத்தில் உள்ளன.

நீதிமன்றத்தின் அனைத்து வேலை நாள்களிலும் நாள் முழுவதும் சமரச மையம் இயங்கும். மிக எளிய முறையில் வேகமாகவும் பணம் விரையமில்லாமலும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தீர்வுகளைக் காணவும் இரு தரப்பினரிடமும் நேரம், சிரமம், செலவு மற்றும் மன உளைச்சல் குறைகிறது. தீர்ப்பு இரு தரப்பினர்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இந்த சமரச மையங்களின் சேவை இருக்கும். இந்த சேவை மையத்தின் பயன்களைப் பொதுமக்கள் அறியும் வண்ணம் விழிப்பு உணர்வு ஒவ்வொருவரும் ஏற்படுத்த வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.