Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினிக்கு கருணாநிதி.. பாரதிராஜா பக்கம் ஜெயலலிதா.. அன்றைய காவிரி போராட்ட களேபரங்கள்! #Flashback

ரிஷிகேஷிலிருந்து அக்டோபர் 8-ம் தேதி மாலை சென்னைத் திரும்பியிருந்தார் ரஜினி. அடுத்த நாள் 9-ம் தேதி காவிரிக்காக தமிழகம் முழுவழும் பந்த் நடந்துகொண்டிருந்த நேரத்தில் பத்திரிகையாளர்களுக்கு ரஜினியிடமிருந்து அதிரடி அழைப்பு. போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினியின் வீடு புதுப்பிக்கும் பணி நடந்துகொண்டிருந்ததால், போர்ட் கிளப் ஏரியாவில் தற்காலிகமாக ரஜினி வசித்து வந்தார். அங்கேதான் பிரஸ்மீட். காவி(!) நிறத்தில் பணியனும் பேன்டும் அணிந்து, மொட்ந்த் தலையுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினி. வீட்டின் ஹாலில் பத்திரிகையாளர்கள் காத்திருந்தபோது மாடிப்படிகளில் இறங்கி வந்த ரஜினி மளமளவென வார்த்தைகளை வீசினார்.

``நான் முதலில் இந்தியன். அதன்பிறகுதான் தமிழன். நெய்வேலியில் திரையுலகினர் போராட்டம் நடத்தினால் என்ன நடந்துவிடும். கர்நாடகத்துக்குப் போகும் மின்சாரத்தை தடுத்துவிட முடியுமா? அந்தப் போராட்டத்தை சென்னையில் நடத்தி, கவர்னரிடம் மனு அளிக்கலாம். நாம் நடத்தும் போராட்டத்தால், கர்நாடகத்தில் உள்ள 40 லட்சம் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான் நெய்வேலி போராட்டத்தை எதிர்த்தேன். `கர்நாடகத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டாம்' என நான் சொல்லவில்லை. `நெய்வேலி வேண்டாம். சென்னையில் நடத்தலாம்' என்றேன். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

என் மீதுள்ள பொறாமையாலும் என் மீது இருக்கும் பயம் காரணமாகவும் தவறான தகவல்களை சிலர் பரப்புகிறார்கள். விஷயத்தை திசை திருப்புகிறார்கள். அவர்கள் யார்? அவர்களைத் தூண்டும் அரசியல்வாதிகள் யார்? என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அவர்களை தேர்தல் நேரத்தில் நான் பார்த்துக் கொள்வேன். நெய்வேலி போகிறவர்கள் போகட்டும். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நான் சென்னையில அமைதியாக வள்ளுவர் கோட்டத்திலோ ஃபிலிம் சேம்பரிலோ நடிகர் சங்கத்திலோ உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். காவிரியில் தண்ணீர் விட வேண்டும் எனக் கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நெய்வேலி போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன். நெய்வேலி போகிறவர்கள் போகலாம். என்னுடன் உண்ணாவிரதம் இருக்க விரும்புகிறவர்கள் இருக்கலாம். என் கருத்தை கருணாநிதி சரியாகப் புரிந்து கொண்டார். அவருக்கு என் நன்றிகள்.'' என விரிவாகவே பேசி முடித்தார் ரஜினி.

ரஜினியு, காவிரியும்

``எனக்கு எதிராகப் பேசுகிறவர்களைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகள் யார்? என்பது எனக்குத் தெரியும். அவர்களை தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்வேன்.'' என ரஜினி மறைமுகமாகச் சொன்னது ஜெயலலிதாவைதான். ரஜினியின் தனி ஆவர்த்தனத்துக்கு கருணாநிதி ஆதரவு அளித்தார். அதற்காக ரஜினி கருணாநிதிக்கு நன்றி சொன்னார். பாரதிராஜாவுக்கு ஆதரவாக இருக்கும் ஜெயலலிதாவைதான் மறைமுகமாக தனது பேட்டியில் பொடி வைத்து பேசினார் ரஜினி.

ரஜினியின் தனிக் கச்சேரி, பாரதிராஜாவுக்கு ஜெயலலிதா ஆதரவு, ரஜினிக்கு கருணாநிதி ஆதரவு எனப் பின்னிப் பிணைந்து கிடந்தது காவிரி விவகாரம். இதற்குப் பின்னால் இருந்தது பக்கா அரசியல். ``கன்னடர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். அதனால்தான் நெய்வேலி போராட்டத்தை ரஜினி புறக்கணித்தார்'' எனக் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், நெய்வேலி போராட்டத்தை ரஜினி புறக்கணிக்க இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது.

நெய்வேலி போராட்டம் நடப்பதற்கு சில மாதங்கள் முன்புதான் `பாபா' பட பிரச்னை ஏற்பட்டு ரஜினிக்கும் பா.ம.க-வுக்கும் இடையே மோதல் உருவானது. `` `பாபா’ படத்தில் ரஜினி சிகரெட் பிடிப்பதையும் மது அருந்துவதையும் சுட்டிக் காட்டி ரஜினி இளைஞர்களை கெடுத்து வருகிறார்.'' என ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். அதோடு, ``நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களே இருக்கக் கூடாது. ரஜினி ரசிகர்கள் தங்கள் நெற்றியில் `முட்டாள்’ என எழுதிக் கொள்ளுங்கள்'' எனவும் காட்டமாகச் சொன்னார் ராமதாஸ். இப்படிப்பட்ட சூழலில் 'பாபா' ரிலீஸ் ஆனபோது, படப் பெட்டிகளை பா.ம.க.-வினர் கடத்தி, தியேட்டர் திரையைக் கிழித்து, திரையரங்க மேனேஜரைக் கடத்தினார்கள். ரஜினி மன்ற நிர்வாகிகளின் வீடுகளைக் கொளுத்தி, அலுவலகங்களைத் தாக்கி, திரையரங்க உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை உண்டாக்கினார்கள்.

இந்தச் சம்பவங்கள் நடந்த கொஞ்ச நாளிலேயே நெய்வேலி போராட்டம் நடைப்பெற்றது. தன்னை மிகக் கடுமையாக எதிர்க்கும் பா.ம.க-வின் கோட்டையான நெய்வேலி போராட்டத்தில் பங்கேற்றால் தனக்கு எதிராக பா.ம.க-வினர் கோஷம் போடுவார்கள் என நினைத்தார் ரஜினி. நெய்வேலி போராட்ட அறிவிப்பை பாரதிராஜா அறிவித்தபோது ராமதாஸிடமிருந்துதான் முதல் ஆதரவு கிடைத்தது. அதனால்தான் `சென்னையில் போராடலாம்' என ரஜினி சொன்னார். இப்படியான காரணத்தால்தான் நெய்வேலி போராட்டத்தை ரஜினி புறக்கணித்தாக ரஜினி தரப்பு சொல்லிக்கொண்டிருந்தது.

காவிரி

''நெய்வேலி போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன்'' என ரஜினி சொன்னதும் ''தமிழ் உணர்வு இருப்பவர்கள் எல்லாம் போராட்டத்திற்கு வருவார்கள்'' என பாரதிராஜா எதிர்வினை ஆற்றினார். ''ரஜினியின் அறிவிப்பு பற்றி கருத்துச் சொல்ல மாட்டேன். நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்தும் செயலாளர் சரத்குமாரும்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். தமிழ் சமுதாயமே திரண்டு நெய்வேலியில் போராட்டம் நடத்துகிறது. இதில், தமிழ் உணர்வாளர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள். யார் வந்தாலும் வராவிட்டாலும் 12-ம் தேதி திட்டமிட்டபடி நெய்வேலியில் திரையுலகினரின் போராட்டம் நடைபெறும்.'' என்றார் பாரதிராஜா.

நெய்வேலி போராட்டம், ரஜினி தனி உண்ணாவிரம் ஆகியவற்றால் தமிழ் திரையுலகம் துண்டாடப்பட்டிருந்தது. கூடவே அரசியலும் புகுந்தது. ''தி.மு.க. நடிகர்கள் நெய்வேலி போராட்டத்தில் பங்கேற்க கூடாது'' என கருணாநிதி தன் பங்குக்கு சொல்லியிருந்தார்.

(பகுதி 6 தொடரும்)

இந்தத் தொடரின் பிற பாகங்களைப் படிக்க காவிரியும் ரஜினியும் க்ளிக் செய்யவும் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement