காவிரி ஆற்றில் இறங்கிப் போராடிய 29 மாணவர்கள் கைது!

மாணவர்கள் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து காவிரியாற்றில் இறங்கிப் போராட்டம் நடத்திய மாணவர்கள் 29 பேரை போலீஸார் கைது செய்தனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாமல் அவகாசம் கடந்தும் காலம்தாழ்த்து வருகிறது மத்திய அரசு. இதைக் கண்டித்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது. அனைத்துக் கட்சிகள், விவசாயச் சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களைவிட, கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம்தான் வீரியமாக இருக்கிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி மாணவர்கள் குளித்தலை கடம்பந்துறை பகுதியில் உள்ள காவிரியாற்றில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு மாணவர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில், தமிழக விவசாயிகளை, குடிநீருக்காகக் காவிரியை நம்பி இருக்கும் மக்களைக் காபந்து பண்ண ஏதுவாகக் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அதை அமைக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வெயில் வேறு உக்கிரம் காட்டியும் சுடும் மணலில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் அறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். 'போராட்டம் நடத்த அனுமதி பெறவில்லை' எனவும் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக அனைவரையும் கைது செய்ய இருப்பதாகவும் கூறினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 29 மாணவர்களையும் கைது செய்து, காவிரி ஆற்றில் இருந்து அழைத்துச் சென்று குளித்தலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் காவிரியாற்றில் இறங்கிப் போராட்டம் நடத்திய மாணவர்களைக் கண்ட அந்தப் பகுதி விவசாயிகள் சிலர், "இந்தப் பசங்களுக்கு புரிஞ்ச எங்களோட கஷ்டம், நாட்டை ஆளும் மவராசாக்களுக்கு புரியலையே" என்று வேதனை தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!