காவிரிக்காக கோஷம் எழுப்பியப்படி ஓடும் பேருந்திலிருந்து குதித்தவர் உயிரிழப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுபியபடியே ஓடும் பேருந்தில் இருந்து குதித்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடியே ஓடும் பேருந்திலிருந்து குதித்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

காவிரி

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள கோவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், செல்வம். 42 வயது நிரம்பிய அவர் ஓட்டுநராக உள்ளார். யாருக்காவது அவசரத் தேவைக்கு ஓட்டுநர் தேவை என்றால் பணிக்குச் செல்வார். மற்ற சமயங்களில் கூலி வேலைகளைச் செய்து வந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், செல்வம் தன் நண்பர்களிடம் காவிரி விவகாரம் தொடர்பாக வேதனையுடன் கருத்து தெரிவித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், கோவைக்குளம் செல்வதற்காக நெல்லை பேருந்து நிலையத்தில் கடந்த 5-ம் தேதி தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்த அவர், உடன் பயணித்தவர்களிடம் காவிரி குறித்து விவாதித்தபடியே வந்துள்ளார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த அவர் திடீரென காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியபடி ஓடும் பேருந்திலிருந்து பின்புற வாசல் வழியாகக் கீழே குதித்தார்.

பேருந்திலிருந்து விழுந்த வேகத்தில் சாலையின் ஓரத்திலிருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியதில் அவரது கையில் எலும்பு முறிந்தது. அத்துடன், முன் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

செல்வம் தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பதால் அன்று கட்சி சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், சொந்த ஊருக்குத் திரும்புகையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டார். அவருக்கு உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்க மருத்துவர்களைச் சந்தித்து முன்னாள் அமைச்சரும் பாளையங்கோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான டி.பி.எம்.மைதீன்கான் ஏற்பாடு செய்தார். அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பலியான செல்வத்துக்கு மனைவியும் மகனும், மகளும் உள்ளனர். காவிரி விவகாரத்துக்காக ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்து பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!