அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ! - நிர்வாக அனுமதியை வழங்கியது தமிழக அரசு

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காகத் தற்போது ரூபாய் 1,652 கோடி நிதியைச் செலவிட, தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியிருக்கிறது.

அத்திக்கடவு

 

திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் 60 ஆண்டு கால கோரிக்கை அவிநாசி - அத்திக்கடவு திட்டம். இத்திட்டத்தின் மூலம் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த 843 ஊராட்சிகளில் உள்ள 74 குளங்கள், 971 குட்டைகளில் நீர் நிரப்பப்பட்டு, சுமார் 50 லட்சம் மக்கள் வரை பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வருடம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, "அத்திக்கடவு திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து, ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து நீரை மின் மோட்டார் மூலம் குழாய்களின் வழியாக 3 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எவ்வித அறிகுறிகளும் தென்படாததால், அத்திக்கடவு போராட்டக் குழுவினர், திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து தற்போது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் குழாய் அமைத்தல், மின் இணைப்பு, பம்பிங், 5 ஆண்டுகளுக்கு தொடர் பாரமரிப்பு பணி மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்காக ரூ. 1,652 கோடி செலவிட, தமிழக அரசு நிர்வாக அனுமதியை வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, திட்டத்தை நிறைவேற்றக்கோரி பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வரும் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!