`ஸ்டெர்லைட்டை மூடியே தீர வேண்டும்' - தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸில் அதிர்ந்த 8 கிராம மக்களின் குரல்

தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும்  என வலியுறுத்தி 8 கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 8 கிராம மக்கள் போராட்டம்

சுற்றுச்சூழலுக்கும் தங்கள் பகுதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும்  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க அனுமதியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வலியுறுத்தியும், தற்போது செயல்பட்டு வரும் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் ஆலையின் அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 57 நாள்களாகத் தொடர் 
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மீளவிட்டான், சங்கரப்பேரி, மடத்தூர், சில்வர்புரம், பாலையாபுரம்  லூசியா  காலனி, முருகேசன் நகர் 
சுப்பிரமனியபுரம் உள்ளிட்ட 8  கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணகான மக்கள் மாவட்ட ஆட்சியர் 
அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் , மாவட்ட  ஆட்சியர்  நேரில்  வந்து  ஆலையை  நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆட்சியர் நேரில் வராததைக் கண்டித்து தூத்துக்குடி - பாளையங்கோட்டை நான்கு வழிச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டித்தும் ஆட்சியரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி வந்தனர். மக்களின் இந்த மறியல்  போராட்டம் காரணமாகப் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அப்போது வந்த பாரத் கேஸ் லாரியை மக்கள் முற்றுகையிட்டனர். இதில், லாரியின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த முற்றுகைப் போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் அதிகளவில் போராட்டத்தில் அமர்ந்துள்ளதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீஸார் திணறினர்.

கலெக்டர் வெங்கடேஷ் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலை குறித்த ஆய்வறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!