ஒரு கோடி ரூபாய்க்கு நடக்கும் களேபரம்! 2 குழந்தையுடன் தவிக்கும் ராணுவ வீரரின் மனைவி


நாட்டுக்காகக் காவல் பணியில் இருந்தபோது பனிச்சரிவில் சிக்கி இறந்தார் கரூர் மாவட்டம், நாச்சிக்களத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி. அவருக்கு அரசு சார்பில் கிடைத்த தொகையைக் குறிவைத்து தி.மு.க பிரமுகர் காய்நகர்த்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்தில் உள்ளது நாச்சிக்களத்துப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். 7 நாள்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டு அவரது உடல், ராணுவ மரியாதையுடன் நாச்சிக்களத்துப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மூர்த்திக்கு தமிழரசி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், மூர்த்தியின் குடும்பத்துக்கு ராணுவ நிதியாக ஒரு கோடி ரூபாய் வந்துள்ளது. சந்தையூரைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் மகாலிங்கம், 'ராணுவ  நிதியிலிருந்து மூர்த்தியின் பெற்றோருக்கு 10 லட்சத்தை வழங்க வேண்டும்' என்று தமிழரசியிடம் கேட்டிருக்கிறார். ஆனால், மூர்த்தியின் பெற்றோர், 'எங்களுக்கு மூன்று லட்சம் போதுமானது. மீதியைத் தமிழரசியிடமே தந்துவிடுங்கள்' என்று ராணுவத் தலைமை அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதன்பிறகு, ராணுவ தலைமையிடமிருந்து பதில் கடிதமும் வந்துள்ளது. இந்தக் கடிதத்தை மூர்த்தியின் பெற்றோர் மகாலிங்கத்திடம் கொண்டு சென்று காண்பித்துள்ளனர்.


 தவிப்பில் ராணுவ வீரரின் குடும்பம்
 

இந்நிலையில்,நேற்று முன்தினம் தமிழரசியைப் பார்க்க அவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, சம்பவத்தை அறிந்த அவர்கள், மகாலிங்கத்தைச் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால், மகாலிங்கமோ,' என்னை வெளியூரில் இருந்து தாக்க வந்துள்ளனர்' என்று பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை நம்பிய பொதுமக்கள், தமிழரசியின் உறவினர்களைத் தாக்கியதோடு, அவர்கள் 8 பேரையும் பிடித்து தோகைமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மகாலிங்கம், `தன்னை தாக்க வந்ததாகவும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அளித்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸார் வழக்கு பதிந்து, கதிரவன், விஜய், பாலமுருகன், ஜெயக்குமார், அருண்ராஜ் உள்பட 7 பேரை கைது செய்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த மாடுவிழுந்தான் பாறையைச் சேர்ந்த ரூபதியைக் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். தலைமறைவான மகேஷை தேடி வருகின்றனர். இதேபோல், ரூபதி கொடுத்த புகாரின்பேரில், மகாலிங்கம் மற்றும் தாக்கிய நபர்கள்மீது தோகைமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிந்துள்ளார். ராணுவ வீரருக்கு கிடைத்த நிதியால் நடக்கும் இந்தக் களேபரங்கள் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!