வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (09/04/2018)

கடைசி தொடர்பு:19:23 (09/04/2018)

`தன்மானமிருந்தால் விளையாட மாட்டார்கள்' - ஐ.பி.எல் வீரர்களுக்கு எதிராகக் கொந்தளிக்கும் பாரதிராஜா

ஐ.பி.எல் போட்டிகள் சென்னையில் நடைபெறக் கூடாது என்பதை வலியுறுத்தி ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழுவினர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஐபிஎல்

கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்துவிட்டாலே தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலத்தில் குதித்துவிடுவார்கள். அதிலும், ஐ.பி.எல் மேட்ச் ஆரம்பம் என்றாலே சி.எஸ்.கே-க்கு விசில் போடு என்கிற பாடல் முழக்கம் தமிழ்நாட்டில் ஒலிக்கும். பல பிரபலங்களும் சி.எஸ்.கே-க்கு தங்களது ஆதரவைத் தெரிவிப்பார்கள். அதிலும், சென்னையில் ஐ.பி.எல் மேட்ச் நடந்தால் சென்னை சேப்பாக்கம் மைதானம் கூட்டத்தால் நிரம்பி வழியும். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி ஐ.பி.எல் மேட்ச் தொடங்கியது. இதில், ஐ.பி.எல் மேட்சில் மும்பை இந்தியன்ஸூம் சி.எஸ்.கே-வும் மோதினர். மிகுந்த பரப்பரப்புக்கு இடையில் நடந்த இந்தப் போட்டியில் சி.எஸ்.கே வெற்றியடைந்தது. இதற்கிடையில் சி.எஸ்.கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. 

சென்னையில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டியை நிறுத்த வேண்டுமென்று சென்னை எழும்பூரில் ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழுவினர் நடத்திய போராட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா, அமீர், கௌதமன், நடிகர் ஆரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினருடன் இணைந்து இந்தப் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, ``தன்மானம் இருந்தால் கிரிக்கெட் வீரர்கள் விளையாட மாட்டோம் என்பார்கள். அரசியல் அங்கீரகாரம் இல்லாமல் தமிழன் என்ற உணர்வோடு ஒருங்கிணைந்தால் வெற்றி கிடைக்கும். காவிரி மேலாண்மையை வாரியம் அமைக்க நடைபெறும் போராட்டத்தை அணைப்பதற்காகத் திட்டமிட்டு ஐ.பி.எல் சென்னையில் நடத்தப்படுகிறது'' என்று கூறியுள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் பாரதிராஜா, தங்கர்பச்சான், அமீர் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தனர் என்பது குறிப்பிடதக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க