Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்சிலோனாதான் மக்களின் அணி... சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அணி

காவிரி விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி எதிர்ப்புகளைச் சந்திக்கிறதோ அதுபோலத்தான், பார்சிலோனா கால்பந்து அணிக்கும் எதிர்ப்புகள் சர்வசாதாரணம். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் சத்தமில்லாமல் போராட்டங்களைக் கடந்துசெல்ல பார்சிலோனா அணி இதை எப்படிச் சமாளிக்கிறது தெரியுமா?

எஃப்.சி. பார்சிலோனா, உலகின் முன்னணி கால்பந்து அணி. ஸ்பெயினின் கேட்டலோனியா மாகாணத்தின் தலைநகரான பார்சிலோனாவின் அடையாளமாக இந்த அணி பார்க்கப்படுகிறது. ஸ்பெயினுக்கும் கேட்டலோனியா மக்களுக்கும் இடையே ஒரு சுதந்திரப் போரே நடக்கிறது. `ஸ்பெயினிலிருந்து பிரிந்து தனி நாடாகலாமா?' என்று கேட்டலோனியா மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்பெயினிலிருந்து வெளியேறி தனிநாடாக மக்கள் முழு ஆதரவளித்தனர். எனினும் கேட்டலோனியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. ஸ்பெயின் தலைநகரம் மாட்ரிட். இந்த நகரைச் சேர்ந்த அணி ரியல்மாட்ரிட் அணியை ஸ்பானீஷ் லீக் தொடரில், பார்சிலோனா வீழ்த்தும் போதெல்லாம் கேட்டலோனியாவின் சுதந்திர கோஷம் விண்ணைப் பிளக்கும். பார்சிலோனாவிடம் ரியல்மாட்ரிட் தோற்றால் ஸ்பெயின் மக்கள் அதைப் பெரிய அவமானமாகக் கருதுவார்கள். பார்சிலோனா அணியின் வீரர்கள் ஸ்பெயின் நாட்டுக்காகவும் விளையாடுவார்கள். ஆனால் அவர்களை ஸ்பெயின் மக்கள் கேட்டலோனியா ஆதரவாளர்களாகத்தான் பார்ப்பார்கள்.

சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. பார்சிலோனா அணி கேட்டலோனியா மக்களின் சொத்து. பங்குகள் வெளியிடப்பட்டு நிதி திரட்டப்பட்டு உருவாக்கப்பட்ட கால்பந்து அணிதான் பார்சிலோனா எப்ஃசி. தேர்தல் நடத்தித்தான் அணியின் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். கேட்டலோனியா மக்கள்தான் பார்சிலோனா அணியின் உரிமையாளர்கள். ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா வெளியேறினால் ஸ்பானீஷ் லீக், கிங்ஸ் கோப்பை போன்ற தொடர்களில் பார்சிலோனா அணி பங்கேற்க முடியாத சூழல் உருவாகும் என்று சொல்லப்பட்டது. உடனே ``இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடுவது குறித்து ஆலோசிப்போம்'' என்று பார்சிலோனா அணி நிர்வாகம் சொல்ல அதிர்ந்தது ஸ்பெயின். காரணம் உலகின் இரண்டாவது மதிப்புமிக்க விளையாட்டு அணி பார்சிலோனா. கால்பந்து வருமானத்தில் மூன்றாவது பெரிய அணி பார்சிலோனா.

பார்சிலோனா அணி மீது கைவைத்தால் அது மிகப்பெரிய பிரச்னையாகும் என ஸ்பெயினே பயப்படும். மக்களின் அணி என்பதால் எப்போதும் மண் சார்ந்த பிரச்னைகளின் பக்கமே இருக்கும் பார்சிலோனா. ஆனால், பார்சிலோனா போல சென்னை அணி தமிழ்நாட்டு மக்களின் அணி அல்ல. இது ஒரு தனியார் நிறுவனம் நிர்வகிக்கும் அணி. அதனால் பார்சிலோனாவிலிருந்து சிஎஸ்கே வேறுபடுகிறது என்கிறார் பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஒருவர். ``சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது தனிநபருக்குச் சொந்தமானது. சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன் மண்ணின் மைந்தராக இருந்தாலும், ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து எந்தத் தன்னிச்சையான முடிவையும் அவரால் எடுக்க முடியாது.. நடிகர் ரஜினிகாந்த் `ஐபிஎல் தொடரில் சென்னை அணி வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாட வேண்டும்'' என்கிறார். ஆனால், இது விளையாட்டு போட்டிக்குள் அரசியலைப் புகுத்தும் விஷயம். சாத்தியமில்லாத விஷயமும் கூட. சென்னை அணிப்போல பெங்களூரு அணியும் காவிரிக்காகக் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினால் என்னவாகும்?'' என்கிறார் அவர்.  

``காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் நம் பக்கம் திருப்ப வேண்டுமென்றால் அது மக்களாகிய நாம்தான் ஒருங்கிணைய வேண்டும். ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் சென்னையில் நடத்தப்பட வேண்டும். ஆனால், மக்கள் யாரும் மைதானத்துக்குச் செல்லாமல் புறக்கணிக்க வேண்டும். சென்னையில் நடைபெறும் போட்டிகள் , ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் இல்லாமல் காணப்பட்டால் நாம் காட்டும் எதிர்ப்பு சர்வதேச நாடுகளையும் சென்றடையும். ஐ.பி.எல் தொடரைப் பார்க்கும் பல நாட்டு மக்களும் கூட `என்ன பிரச்னை?' என்று யோசிப்பார்கள். வெற்று மைதானங்கள் அகில இந்தியாவையும் உறுத்தத் தொடங்கும். போட்டியை மக்கள் புறக்கணிக்கும் பட்சத்தில் ஐ.பி.எல். நிர்வாகம் வருமானத்தை இழக்க விரும்பாது. தானாகவே அடுத்த நகரத்துக்குப் போட்டி மாற்றப்பட்டுவிடும்'' என்கிறார் அந்த கிரிக்கெட் விமர்சகர்!

சென்னை என்ன செய்யப்போகிறது? 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement