வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (09/04/2018)

கடைசி தொடர்பு:19:30 (09/04/2018)

47 நாடுகள்... 701 அரங்குகள்.. முன்னணித் தளவாட நிறுவனங்கள்... இந்திய ராணுவத்தின் 'டிபெக்ஸ்போ - 18'

47 நாடுகள்... 701 அரங்குகள்.. முன்னணித் தளவாட நிறுவனங்கள்... இந்திய ராணுவத்தின் 'டிபெக்ஸ்போ - 18'

டிபெக்ஸ்போ-18

லக அளவில் நான்காவது வலிமையான ராணுவத்தைக் கொண்ட நாடு இந்தியா! எப்படிப்பட்ட போர்க்கால நிலைமைகளையும் சமாளிக்கும் சக்திகொண்டது நமது ராணுவம். ஆனால், நமது போர்க்கருவிகள் பெரும்பாலானவை வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படுபவை. நான்காவது வலிமையான ராணுவத்தைக் கொண்ட இந்தியாவால் போர்க்கருவிகளைச் சொந்தமாக உற்பத்திச் செய்ய முடியாதா... என்ற கேள்விக்குப் பதிலாக `முடியும்' என உலக நாடுகளுக்குக் காண்பிக்கத்தான் இதுவரை இல்லாத அளவில் மிகப்பிரமாண்டமான முறையில் டிபெக்ஸ்போ என்னும் ராணுவக் கண்காட்சியை நடத்துகிறது இந்திய அரசு.

டிபெக்ஸ்போ

சென்னை அடுத்துள்ள திருவிடந்தை கடற்கரையில், ஏப்ரல் 11 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில், பத்தாவது ராணுவக் கண்காட்சி `டிஃபெக்ஸ்போ- 18' (DEFEXPO - 18) என்ற பெயரில் நடக்கவிருக்கிறது. முப்படையும் ஒன்றிணைந்து கண்காட்சி நடத்துவது இதுதான் முதல் முறை. இந்த ராணுவக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12 ம் தேதி அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து கண்காட்சியைப் பார்வையிடவிருக்கிறார்.

டிபெக்ஸ்போ-18

2,90,000 சதுர அடியில் நடைபெறும் இந்தக் கண்காட்சியே இதுவரை நடந்த ராணுவக் கண்காட்சிகளில் மிகப்பெரியது. இதில் 47 நாடுகள் கலந்துகொள்கின்றன. மொத்தம் 701 அரங்குகள். அதில் இந்தியாவைச் சேர்ந்த 539 தளவாட உற்பத்தி நிறுவனங்களும், உலக நாடுகளில் உள்ள 162 நிறுவனங்களும் அரங்குகள் அமைத்துள்ளன. டாடா, எல் அண்ட் டி, கல்யாணி, மஹிந்திரா, எம்.கே.யூ, டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல்., பி.இ.எல்., பி.டி.எல்., பி.இ.எம்.எல்., எம்.டி.எல்., ஜி.ஆர்.எஸ்.இ. மிதானி போன்ற ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் 70 விழுக்காடு பெருநிறுவனங்களும், 15 விழுக்காடு சிறு, குறு நிறுவனங்களும் (MSME - சிறு மற்றும் குறு நிறுவன வளர்ச்சித் துறை) இந்தியாவிலிருந்து கலந்துகொள்கின்றன. 

டிபெக்ஸ்போ-18

அதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களான `லாக்ஹீட் மார்ட்டின்', `போயிங்', சுவீடனைச் சேர்ந்த `சாப்', ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த `ஏர்பஸ்', `ரஃபீல்',  ரஷ்யாவைச் சேர்ந்த `ரோசோன்போரோன் எக்ஸ்போர்ட்ஸ்', `யுனைடெட் ஷிப்பில்டிங்', இங்கிலாந்தைச் சேர்ந்த 'பி.ஏ.ஈ சிஸ்டம்ஸ்', இஸ்ரேலைச் சேர்ந்த `சிபாட்', ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த `ரோடு அண்ட் ஸ்வார்ஸ்' போன்ற உலகின் தலைசிறந்த ராணுவத் தளவாட நிறுவனங்களும் கலந்துகொள்கின்றன. கண்காட்சியில் கலந்துகொள்ளும் இந்தியச் சிறு, குறு நிறுவனங்களுக்குக் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் இந்திய ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் 72 விழுக்காடு கலந்துகொள்கின்றன. கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஆஃப்கானிஸ்தான், செக் குடியரசு, பின்லாந்து, மடகாஸ்கர், மியான்மர், நேபாளம், போர்ச்சுக்கல், ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ஷேய்ச்சல்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து அமைச்சர்கள் வருகை தருகிறார்கள்.

டிபெக்ஸ்போ-18

இந்திய ராணுவத்துக்குத் தேவையான ராணுவ பொருள்கள் மற்றும் உதிரிப்பாகங்களை உள்நாட்டிலேயே மிகச்சிறப்பாக உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அவற்றை உலக நாடுகளுக்கும் விற்பனை செய்யமுடியும் என்று இந்திய நிறுவனங்கள் தங்களின் திறனை உலக நாடுகளுக்குக் காட்டவிருக்கின்றன. அப்படிச் செய்யும் பட்சத்தில் பல நாடுகள் இந்திய நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்ளும். அதன்மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கும். 

டிபெக்ஸ்போ-18

இந்தக் கண்காட்சியைப் பற்றி ராணுவ அமைச்சக உற்பத்தித்துறை செயலர் அஜய் குமார் ``ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில், இந்தியாவின் வலிமையை உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்துவதே கண்காட்சியின் முக்கிய நோக்கம். இதன்மூலம் சிறு, குறு நிறுவனங்கள் நிச்சயம் பயனடையும். மேலும் கண்காட்சியின் மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்'' என்றார். கண்காட்சியில் பல நாட்டு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் கலந்துகொள்வதால், சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

டிபெக்ஸ்போ-18

இது முழுக்க முழுக்க ராணுவ காரணங்களுக்காக நடைபெறுவதால், கண்காட்சியின் கடைசி நாளான 14 ம் தேதி மட்டுமே கண்காட்சியைச் சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நாள்களில் கண்காட்சியைச் சுற்றிப் பார்ப்பதற்கான கட்டணமாக 2000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்கான ஆன்லைன் புக்கிங் காலக்கெடு ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. கண்காட்சியையொட்டி பொதுமக்கள் பார்வைக்காக ஏப்ரல் 13 மற்றும் 15 ம் தேதிகளில் சென்னை துறைமுகத்தில் போர்க்கப்பல்கள் நிறுத்திவைக்கப்படும். கண்காட்சியில் பீரங்கி, டேங்குகள், போர் விமானம், போர்க்கப்பல், பாராசூட் சாகசங்கள் நடைபெறுகின்றன. `கண்காட்சிப் பார்வை நாள்களில் பொதுமக்கள் கண்டிப்பாக அடையாள அட்டை(ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவை... ) வைத்திருக்க வேண்டும்' எனப் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிபெக்ஸ்போ-18

மொத்தத்தில் இந்தப் பத்தாவது ராணுவக் கண்காட்சியின் முக்கிய நோக்கம் `இந்திய ராணுவத்தின் வலிமையை உலக நாடுகளுக்கு மேலும் பறைசாற்றுவதே'


டிரெண்டிங் @ விகடன்