Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அன்று 450 மாணவர்கள்... இன்று 35 பேர்! - அரசுப் பள்ளிக்கு மூடுவிழா நடத்திய கிராம மக்கள்

அரசு பள்ளிக்கூடம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் குறிப்பிட்ட இரு ஆசிரியர்களின் செயல்பாட்டால் பள்ளியின் தரம் சீரழிந்துவிட்டதாகக் கூறி கிராம மக்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை இழுத்து மூடி பூட்டுப் போட்டும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தினர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. பழம் பெருமை வாய்ந்த இந்தப் பள்ளியில் 1 முதல் 8 வகுப்புகளில் மொத்தமே தற்போது 35  மாணவ- மாணவியர் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியையைச் சேர்த்து இந்தப் பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆர்.கண்ணன் என்பவர் பள்ளிக்கு குறித்த நேரத்துக்குத் தொடர்ந்து வராமலும் கல்விச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமலும் இருந்துள்ளார்.

இது குறித்து பெற்றோர் மற்றும் கிராம மக்கள், கல்வித்தறை அலுவலர்களுக்குப் பலமுறை புகார் மனுக்கள் தெரியப்படுத்தியுள்ளனர். ஆசிரியர்களும் சரியான முறையில் மாணவர்களுக்குக் கல்வி கற்றுத்தரும் பணியில் அக்கறையில்லாமல் இருந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பள்ளியின் கல்வித்தரம் மோசமடைந்திருக்கிறது. இதுபற்றி தலைமை ஆசிரியையிடமும் அத்திக்குளம் கிராமமக்கள் முறையிட்டுள்ளார்கள். ஆனாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் கிராம மக்களும் இன்று காலை ஒன்று திரண்டு வந்து பள்ளிக்குப் பூட்டுப் போட்டுவிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளும் பள்ளிக்கு முன்பாக அமர்ந்துவிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார்  உடனடியாகச் சாலை மறியலை சீர் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர்  ராமநாதன், காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா, காவல் ஆய்வாளர் எம்.ஜஸ்டின் பிரபாகரன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.விஜயலட்சுமி ஆகியோரும் களத்துக்கு வந்தனர். அவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர், ``ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு ஆங்கில வழியில் முடித்த எனது மகன் பரத் கிஷோரை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்போடு இந்தப் பள்ளியில் நடப்புக் கல்வியாண்டில் 7 ம் வகுப்பில் சேர்த்தேன். நன்றாகப் படித்துக்கொண்டிருந்த என்மகன் இந்தப் பள்ளியில் சேர்ந்தபிறகு ரொம்பவும் பின்தங்கிவிட்டான்" என்றார்.

கிராம மக்கள்

அங்கிருந்த மாணவர்கள் பள்ளியில் வேலைசெய்யும் குறிப்பிட்ட மூன்று ஆசிரியர்களின் செயல்பாடுகளைப் பற்றி அதிகாரிகளிடம் அதிருப்தியான புகார்களைக் கூறினார்கள். அதுபோல், 8 ம் வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து ஆங்கிலத்தில் எத்தனை பாடம் நடத்தியுள்ளார்கள் என்று கிராம மக்கள், பேச்சுவார்த்தை நடத்த வந்த அலுவலர்கள் முன்னிலையில் கேட்டனர். முதல் பாடத்தில் பாதி நடத்தியுள்ளதாய் அந்த மாணவன் தெரிவித்தான். 3 ம் பருவத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் முதல் பாடமே நடத்தி முடிக்கப்படாமல் இருந்துள்ளது கல்வி அலுவலர்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

``450 பிள்ளைகள் படித்த பள்ளிக்கூடம் 35 பேரில் வந்து நிற்கிறது. தினமும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் 10 மணிக்கு மேல் வருகிறார்கள். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கிராம மக்களும் பெற்றோரும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து பிரச்னைக்குரிய
ஆசிரியர் ஆர்.கண்ணன், தலைமை ஆசிரியர் வீ.சரளா, ஆசிரியை வீ.விஜயராணி ஆகிய மூவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணியிட மாறுதல் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிக்கை அனுப்புவதாக வட்டாட்சியர் ராமநாதன் உறுதியளித்தார். கல்வித்துறை அலுவலர்களும் மூவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணியிட மாறுதல் செய்வதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பிற்பகல் மாணவ, மாணவியர் பள்ளிக்குச் சென்றனர். இதனையடுத்து சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement