காவிரி பிரச்னைக்காக தனி மனிதர்கள் செய்யும் நூதனப் போராட்டங்கள்... அனல் பறக்கும் திருச்சி..!

 
காவிரி பிரச்னைக்காக தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், திருச்சியில் தனி ஒரு நபர் கையில் கொடியுடன் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளார்.
 
 
தமிழகத்தில் காவிரிக்காகப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக திருச்சியில் விவசாயச் சங்கங்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் காவிரிக்காகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று காவிரி முக்கொம்பில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதேபோல் இந்தி எதிர்ப்பு, வானொலி நிலையம் முற்றுகை எனப் போராட்டம் வடிவங்கள் மாறி வருகின்றன. 
இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் நாம் தொழிலாளர் சங்கப் பிரிவைச் சேர்ந்த மாநகரப் பகுதிச் செயலாளர் கணேஷ், திருச்சி துவாக்குடியில் உள்ள சுங்கச் சாவடியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தனியாளாக, வீரப்பன் படம் மற்றும் நாம் தமிழர் கட்சிக் கொடியை சுமந்தபடி, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 
அதோடு, திருச்சி துறையூரைச் சேர்ந்த மனோகரன் என்பவர், திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்துக்கு இன்று வந்தார். திங்கள் ஆதார்கிழமை என்பதால் மனுநீதி நாளில் மனுக்கொடுக்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து. அப்போது அங்கு வந்த மனோகரன், ``காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததால், தமிழர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் மத்திய அரசு வழங்கிய ஆதார் அட்டையைத் திரும்ப ஒப்படைக்கின்றேன்” என்றார். அதைக் கேட்ட நீதி மனுப்பதிவு அதிகாரிகள், சிலர் மனுவைப் பதிவு செய்து தரமுடியாது என்றனர். ஆனால், அந்தக் கூட்டத்தில் இருந்த பெண் அலுவலர், நல்ல முடிவு. வாழ்த்துகள் என்றார். ஆனால் போலீஸார் அவரை பலக் காரணங்களைச் சொல்லி இழுத்தடித்தனர். இறுதியாகப் பத்திரிகையாளர்கள் உதவியுடன் மாவட்ட ஆட்சியரிடம், தனது ஆதார் ஒப்படைப்பு மனுவை அளித்தார். 
 
இதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடப் போராடி, இந்திப் பிரசார சபாவை முற்றுகையிட்டு கைதான மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விடுவிக்கக் கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னணி நிர்வாகி காளியப்பன், பாடகர் கோவன் தலைமையில் ஏராளமான மக்கள் அதிகாரம் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் மனு  கொடுத்தனர். 
 
காவிரி மேலாண்மை வாரியம் பிரச்னைக்கான போராட்டங்களால் திருச்சியில் கொஞ்சம் கூடுதலாகவே அனல்பறக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!