வெளியிடப்பட்ட நேரம்: 08:51 (10/04/2018)

கடைசி தொடர்பு:08:51 (10/04/2018)

''விஜய் நல்லவரும்மா; அம்மா ப்ளீஸ் என்கிட்ட பேசும்மா...'' - கால்கள் இழந்த காதலனை திருமணம் முடித்த ஷில்பா உருக்கம்!

வாழ்க்கை நாம் நினைத்ததுபோலெல்லாம் அமைவதில்லை... அப்படித்தான் ஷில்பாவுக்கும். ஆசை ஆசையாக காதலித்த காதலன் ரயில் விபத்தொன்றில் தன் இரு கால்களையும் பறிகொடுக்க ஆடிப்போனார் ஷில்பா. உடனே மனதை மாற்றிக்கொள்ளாமல் தன் காதலனை மருத்துவமனையில் கரம்பிடித்து சமீபத்திய நாளிதழ் செய்தியானார். புகுந்த வீடே ஷில்பாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட, ஒரு மதிய வேளையில் அவரிடம் பேசினோம்.

ஷில்பா

``விஜயும் நானும் காலேஜ் படிக்கிறப்பலருந்து லவ் பண்றோம். எங்க லவ் பத்தி ரெண்டு வீட்டுக்குமே தெரியும். அவங்க முன்னாடிதான் எங்க கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சது. விஜயை வந்து பொண்ணு கேட்க சொல்லுனு சொல்லி வெச்சிருந்தாங்க. அதுக்குள்ளதான் அவருக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு'' என்கிற ஷில்பாவின் குரல் கம்முகிறது. 

உடனே அவரைப் பார்க்கணும்னு மனசு படபடன்னு அடிச்சுக்கிச்சு. அவர் அட்மிட் ஆகியிருக்கிற ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டிப் போகச் சொல்லி, என் வீட்ல கெஞ்சினேன். ம்ஹூம்... ஒருத்தரும் அசையலை. ``அவன் நல்லா இருந்தப்போ கல்யாணத்துக்கு ஓகே சொன்னோம். இப்போ ரெண்டு காலும் இல்லாம உன்னை எப்படிக் காப்பாத்துவான். கால் இல்லாதவனை கல்யாணம் பண்ணிக்கணும்னு கோயில்ல நேர்ந்துக்கிட்டியா'னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. மனசு வெறுத்துப் போச்சுங்க. விஜய் நிலைமை எனக்கு வந்திருந்தா, அவரு என்னை நிச்சயம் கை விட்டுருக்க மாட்டார். என் விஜயைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும். அவரு நல்லா இருக்கும்போது மறந்துடச் சொல்லியிருந்தாலும், சரி வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கட்டும்னு நினைச்சு மறந்துட்டிருப்பேனோ என்னமோ. ஆனா, இந்த நிலைமையில்..? ம்ஹூம், விஜயை என்னால் விட்டுக்கொடுக்க முடியாதுனு உறுதியோடு சொல்லிட்டேன்'' என்கிற ஷில்பாவின் குரலில் காதலும், பாசமும் போட்டி போடுகிறது.

திருமணம்

விஜயைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டுக் கிளம்பிய அந்த நாளை கண் முன்னே கொண்டுவரும் ஷில்பா, ``அவருக்கு ஆக்சிடென்ட்டாகி ரெண்டு மாசம் ஆகிடுச்சு. அதுவரை என்னால் வீட்டை எதிர்த்துக்கிட்டு எதுவும் செய்ய முடியலை. ஆனால், எப்படியாவது தினமும் போன் பண்ணி பேசிடுவேன். கொஞ்ச நாள் கழிச்சு, போன் பண்ணினால் எடுக்காமல் கட் பண்ண ஆரம்பிச்சார். எனக்கு ஒண்ணும் புரியலை. அன்னைக்கும் அப்படித்தான் போன் பண்ணினேன். ரொம்ப நேரத்துக்கு அப்புறம் எடுத்த விஜய், `என்னால் உன்னைச் சந்தோஷமா வெச்சுக்க முடியாது. என்னை மறந்துடு'னு அழ ஆரம்பிச்சுட்டார். இதுக்கு மேலே தாமதிச்சா என் விஜயை இழந்துடுவேன்னு பயம் வந்துடுச்சுங்க. அதனால், மனசுல தைரியத்தை வரவெச்சுட்டு கிளம்பிட்டேன். நேரா அவங்க வீட்டுல போய் நின்னுட்டேன். `உங்க மகனைத் தவிர, வேற யாரையும் என் மனசாலும் நினைக்க முடியலை'னு சொன்னேன். என் காதலின் உறுதியைப் பார்த்த விஜயின் அம்மா, எங்க ரெண்டு பேருக்கும் உடனே கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க.

இது தெரிஞ்சதும் என் அண்ணன், அண்ணி, அக்கா, மாமா எல்லாரும் முதல்ல திட்டி தீர்த்துட்டாங்க. நான் எதுக்கும் அசையலை. என் காதலனை கரம் பிடிச்ச சந்தோஷத்தோடு அவரைப் பார்த்துக்கிட்டேன். இப்போ என் அண்ணன், அண்ணி போன் பண்ணி, `நீ நல்ல காரியம்தான் பண்ணியிருக்கே. எங்க வீட்ல இப்படியொரு பொண்ணு பொறந்திருக்கேன்னு பெருமையா இருக்கு'னு சொல்றாங்க. எங்க அப்பாவும், `எல்லா பிரச்னைகளையும் சரி பண்ணிடலாம் அம்மு'னு தைரியம் சொல்லியிருக்கார். அம்மா மட்டும் இன்னமும் என்கிட்ட பேசலை. நானும் விஜயும் நல்லா வாழ்றதைப் பார்த்தால், அம்மா நிச்சயம் என்கிட்ட பேசிடுவாங்க. விஜய்க்கு ரெண்டாவது ஆபரேஷன் பண்ணிட்டாங்க. இனிமே ஒண்ணும் பிரச்னை இல்லைன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் டிகிரி முடிச்சிருக்கோம். அவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சவர். நான், பி.காம். எங்களுக்கு வேலை கிடைச்சிடுச்சுன்னா, இன்னும் கூடுதல் தன்னம்பிக்கையோடு வாழ ஆரம்பிச்சுடுவோம்' என்கிற ஷில்பாவின் குரலில் நம்பிக்கையின் மீதான காதலும் அபரிதமாக இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்