”துணை வேந்தரை கவர்னர் திரும்பப் பெற வேண்டும்” அதிமுக எம்.எல்.ஏ அதிரடி

”அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரை கவர்னர் திரும்பப் பெற வேண்டும்” என்று அதிமுக மாநில அமைப்புச் செயலாளரும், காட்டுமன்னார் கோவில் எம்.எல்.ஏவுமான முருகுமாறன் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முருகுமாறன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமெனத் தமிழகமெங்கும் மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதமாகக் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டிருக்கிறார். கவர்னரின் இந்த நியமனம் ஒட்டுமொத்த தமிழர்களின் இதயத்திலும், தலையிலும் தடியைக் கொண்டு அடித்தது போல உள்ளது. தற்போது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூரப்பா கர்நாடகாவில் காவிரி தண்ணீர் கேட்பாரா ? தமிழக மக்களின் உணர்வு சார்ந்த விஷயங்களுக்கு கவர்னர் மதிப்பு கொடுக்க வேண்டும். அதனால் துணை வேந்தராக சூரப்பாவை நியமித்ததை கவர்னர் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக் காலம் அடுத்த மாதத்தோடு நிறைவு பெறுகிறது. அதனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வேற்று மாநிலத்தவரை நியமிக்கக் கூடாது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் நியமிக்க வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!