'பாஜக எம்.எல்.ஏ.மீது குற்றஞ்சாட்டிய இளம்பெண்ணின் தந்தை மர்ம மரணம்' - உ.பி.யில் பதற்றம்! | Father of 18 year girl who alleged rape by bjp mla, died under mysterious circumstance

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (09/04/2018)

கடைசி தொடர்பு:22:00 (09/04/2018)

'பாஜக எம்.எல்.ஏ.மீது குற்றஞ்சாட்டிய இளம்பெண்ணின் தந்தை மர்ம மரணம்' - உ.பி.யில் பதற்றம்!

பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வல்லுறவுக் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டைக் கூறிய இளம்பெண்ணின் தந்தை, போலீஸ் காவலில் இறந்துபோயிருப்பது, மாநில அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஞாயிறன்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்தின் முன்பு, குறிப்பிட்ட பெண் தீக்குளிக்க முயன்றார். மாநிலத்தை ஆளும் பாஜகவைச் சேர்ந்தவரான உன்னாவோ மாவட்டத்தின் பங்காரோ தொகுதி எம்.எல்.ஏ. செங்கர், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியே, அந்தப் பெண் தீக்குளிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, கடந்த 5  -ம் தேதியன்று அவரின் தந்தை பப்புசிங்கை எம்.எல்.ஏ.வின் ஆட்கள் தேடிப்போய் தாக்கியுள்ளனர். எம்.எல்.ஏ.வின் தம்பி அனில்சிங் தலைமையில்தான் பப்புசிங் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் ஆயுத வழக்கில் பப்புசிங், சிறையில் அடைக்கப்பட்டார். 

மாவட்ட சிறையிலிருந்து நேற்று இரவு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பப்பு, இன்று காலையில் உயிரிழந்தார். அடிவயிற்று வலியால் அவதிப்பட்டும் வாந்தி எடுத்தபடியும் நேற்று இரவு சேர்க்கப்பட்ட பப்பு, இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று உன்னாவோ மாவட்ட மருத்துவமனை அதிகாரி டாக்டர் அதுல் தெரிவித்தார். 

ஏற்கெனவே பாஜக எம்.எல்.ஏ. மீதான வல்லுறவுக் குற்றச்சாட்டு, யோகி ஆதித்யநாத் அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அதுவும் நீதிமன்றக் காவலில் இறந்துபோனது கூடுதல் பிரச்னையை உண்டாக்கியுள்ளது. 

பப்புசிங்கை நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்ற போது அவர் தாக்கப்பட்டார் என்று ’பாதிக்கப்பட்டவரான’ அவரின் மகள் கூறியுள்ளார். 

பிரச்னை தீவிரமானதை அடுத்து, எல்.எல்.ஏ.வின் ஆட்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட போலீஸ்நிலைய பொறுப்பு அதிகாரியும் நான்கு போலீஸ்காரர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.