`பக்தர்களைத் தாக்கிய அமைச்சரின் பாதுகாவலர்கள்' - சாலை மறியலால் ஸ்தம்பித்த நெடுஞ்சாலை!

நார்த்தாமலை கோவில் திருவிழாவில் கலந்துக்கொள்ள வந்த பக்தர்களை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பாதுகாப்பு போலீஸார் தாக்கியதால், ஆவேசம் கொண்ட பக்தர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று (09.04.2018)  நடந்தது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொள்ளும் மிக பிரமாண்டமான கோவில் திருவிழா இது. இதற்காகவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இந்தக் கோவிலின் தேரோட்டத்தை மாலை 3.00 மணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரி தலைவர் வைரமுத்து, கலெக்டர் கணேஷ் ஆகியோர் வடம் பிடித்து துவக்கிவைத்தனர். முன்னதாக, கோவில் வளாகத்தின் அருகில் போடப்பட்டிருந்த அன்னதானப் பந்தலில் பக்தர்களுக்கு உணவு பரிமாறும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் கலந்துக்கொண்டார். எல்லா நிகழ்வுகளையும் முடித்துவிட்டு நார்த்தாமலையிலிருந்து கிளம்பினார். பக்தர்கள் கூட்டம் எந்தவருடமும் இல்லாத  வழக்கமாக அதிகமாக இருந்தது. சாலையெங்கும் நிரம்பி வழிந்த கூட்டத்தின் நடுவில் அமைச்சரின் கார், அதனைத்தொடர்ந்து கலெக்டர் கார் மேலும் அ.தி.மு.க முக்கியஸ்தர்களின் வாகனங்கள் ஆகியவை நத்தையைப் போல் ஊர்ந்து சென்றன. கடைசியாக அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் வாகனம் வந்தது.

பொம்மாடிமலை விலக்கு அருகே இந்த வாகன அணிவகுப்பு சென்றுகொண்டிருந்தபோது, அமைச்சரின் வாகனத்தை தொடர்ந்து செல்ல பாதுகாப்பு போலீஸார் வாகனம் வேகமாகச்சென்றது. அப்போது கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துள்ளது. இதனால் முன்னேறிச்செல்ல முடியாத சூழல் அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் வாகனத்துக்கு ஏற்பட்டது. இதனால் உண்டான விரக்தியில் ஆத்திரமடைந்த போலீஸார் கடவுள் வேடமிட்டு ஆடிச்சென்ற இரு பக்தர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. கூடச்சென்ற பெண் பக்தர்களையும் பிடித்துத் தள்ளி விட்டதாகவும் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள், திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலை திடீரென சாலையில் அமர்ந்து  மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த எஸ்.பி செல்வராஜ் கீரனூர், டி.எஸ்.பி ஃபிரான்சிஸ் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அதிரடிப்படை போலீஸாரும் குவிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தை சுமூகமாக  முடிந்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. திருவிழா நாளில் நடந்த திடீர் சாலை மறியலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!