`ஏப்ரல் 11-ம் தேதி வணிகர்கள் கடைகளை அடைப்பது சிரமமே' - விக்கிரமராஜா சூசகம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 11-ம் தேதி கடையடைப்பு அறிவித்துள்ளது பா.ம.க. ஆனால் கடையடைப்பு இல்லாத போராட்டங்களில் வணிகர்கள் பங்கேற்பார்கள் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சூசகமாக தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க ஏப்ரல் 3-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. அப்போராட்டத்திற்கு ஆதரவாக கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்திருந்தார். ஆனால் ஏப்ரல் 3-ம் தேதி பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அ.தி.மு.க-வின் கையாளாகாத தனத்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இவர்கள் நடத்தும் உண்ணாவிரத நாடகத்திற்கு நாங்கள் துணைபோக மாட்டோம் என வணிகர்கள் ஆதங்கப்பட்டார்கள். ஏப்ரல் 5-ம் தேதி எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்த வேலைநிறுத்ததிற்கு வணிகர்கள் முழுமையான ஆதரவு அளித்தார்கள்.

இந்நிலையில் ஏப்ரல் 11-ம் தேதி பா.ம.க. வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய விக்கிரமராஜா, ‘இன்றைய சூழலில் வணிகர்கள் அடிக்கடி கடைகளை மூடுவது சிரமம் . கடையடைப்பு இல்லாத போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்போம்” என்றார். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், ‘அடிக்கடி கடைகளை முடினால் எங்களோட வருமானம் பாதிக்கும். இதுதான் எங்களோட வாழ்வாதாரம். காவிரி பிரச்னைக்காக உணர்வுப்பூர்வமாக ஒருநாள் கடைகளை அடைச்சாச்சு. பா.ஜ.க., அ.தி.மு.க தவிர மற்ற கட்சிகள் எல்லாம் சாலை மறியல், ரயில் மறியலுனு களத்துல இறங்கி போராடுறாங்க. தமிழ்த் தேசிய இயக்கங்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துறாங்க. பா.ம.க-வும் இதுமாதிரியான போராட்டங்களை நடத்திதான் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கணும். ஆனால் எங்களை கடைகளை அடைக்க வச்சி, அவங்க குளிர் காயலாம்னு நினைக்குறாங்க. இதுல எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!