'இந்திய அரசைத் தவறான பாதையில் வழிநடத்துகிறார் மோடி' - கொந்தளிக்கும் காங்கிரஸ் கட்சி!

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் செய்வதற்கு எதிராக, வட இந்தியாவில் ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து, பட்டியலினப் பிரிவினருக்கு ஆதரவாக  காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ்
 
சமூக மக்களின் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலும், பட்டியலின மக்களுக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் வகையில், அந்தச் சட்டத்தை திருத்தம்செய்த மத்திய பி.ஜே.பி அரசைக் கண்டித்தும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில், நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 
 
 திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில், திருச்சி ஜங்‌ஷன் பகுதி, திண்டுக்கல் சாலையில் உள்ள தண்ணீர்த்தொட்டி அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 
 
திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹர் தலைமைதாங்கினார். தெற்கு மாவட்டத் தலைவர், வழக்கறிஞர் கோவிந்தராஜன், வடக்கு மாவட்டத் தலைவர், திருச்சி கலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர்கள் சுப.சோமு, சுஜாதா, மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அரவானூர் விச்சு, மாநிலச் செயலாளர் எல்.வி.ரெக்ஸ், ஹேமா, முன்னாள் வடக்கு மாவட்டத் தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜி.எம்.ஜி. மகேந்திரன், சக்கரபாணி, மாநில எஸ்.சி.,எஸ்.டி. செயலாளர்  உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 
இந்தப் போராட்டத்தில் பேசிய பலர், ``மோடி பிரதமர் ஆனதிலிருந்து நாட்டில் வாழும் மக்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை. இந்திய அரசைத் தவறான பாதையில் வழிநடத்துகிறார். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தையும், இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டுவருகிறது'' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!