வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (10/04/2018)

கடைசி தொடர்பு:08:00 (10/04/2018)

`2,720 ரூபாய் சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும்?' கொந்தளிக்கும் ஓ.எச்.டி ஆபரேட்டர்கள்

``இன்றைய தேதியில் முப்பது ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கினாலே, குடும்பம், குட்டிகளை வச்சுகிட்டு காலம் தள்ள முடியாத நிலைமை. இந்தச் சூழலில், எங்களுக்கு வெறும் 2,720 ரூபாயும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு 4,560 ரூபாயும் சம்பளம் கொடுத்தா, அத வச்சுக்கிட்டு எப்படி குடும்பம் நடத்த முடியும்? என்று ஊராட்சிகளில் பணிபுரியும் ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் கூறியுள்ளார்கள். 

ஓ எச் டி ஆபரேட்டர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சிகளில் பணிபுரியும் ஓ.எச்.டி ஆபரேட்டர்களும், துப்புரவுப் பணியாளர்களும் நேற்று தமிழ்நாடு முழுக்க காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சி.ஐ.டி.யூ அமைப்பு ஒருங்கிணைத்த இந்தப் போராட்டம், கரூர் மாவட்டத்திலும் நடந்தது. கரூர் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தக் காத்திருப்புப் போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய அவர்கள்,   ``ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் தினமும் அதிகாலை நாலு மணிமுதல் இரவு வரை மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பிக் கேட் வால்வுகள் மூலம் பல்வேறு தெருக்களுக்கு முறை வைத்து தண்ணீர் விநியோகித்து வருகிறோம். அதோடு, அந்தப் பகுதியில் வரி வசூல், குழாய் மராமத்து, தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறோம். துப்புரவுப் பணியாளர்கள் துப்புரவுப் பணியை செய்வதுடன், டெங்கு கொசு ஒழிப்பு, மருந்து தெளித்தல், வரி வசூல், ஊராட்சி செயலாளருக்கு உதவியாக அலுவலகப் பணிகளை செய்றதுன்னு பல வேலைகளைச் செய்து வருகின்றனர். 12 மணி நேரத்துக்கு மேல் தினமும் பணிபுரியும் எங்களை, அரசு பகுதிநேர ஊழியர்கள்ன்னு அறிவிப்பது எந்த வகையில் நியாயம்?. 

அதேபோல், ஓ.எச்.டி ஆபரேட்டர்களான எங்களுக்கு மாதம் 11,236.16 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், 2,720 ரூபாய்தான் வழங்குகிறார்கள். அதேபோல், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மாதம் 9234.16 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், 4,560 ரூபாய்தான் வழங்குகிறது அரசு. எங்களுக்கு உரியச் சம்பளத்தையும், ஓய்வூதியத்தையும் அரசு உடனே வழங்க ஆணை பிறப்பிக்கனும். இல்லைன்னா, எங்க போராட்டம் பல்வேறு கட்டங்களாக நடக்கும். அடுத்து, நாங்க தண்ணீர் திறக்காமலும், துப்புரவுப் பணியாளர்கள் துப்புரவுப் பணியை செய்யாமலும் ஒத்துழையாமை போராட்டம் நடத்துவோம். அப்புறம், குப்பைகளால் நிரம்பி தமிழ்நாடே நாறிப்போகும்" என்றார்கள் ஆக்ரோஷமாக!