வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (10/04/2018)

கடைசி தொடர்பு:07:44 (10/04/2018)

மனஅழுத்தத்தால் சக வீரர்களைச் சுட்டுக் கொன்றவருக்கு மூன்று ஆயுள் தண்டனை!

மன அழுத்தம் காரணமாக சகவீரர்களை சுட்டு கொன்ற தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

கல்பாக்கம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த விஜயபிரதாப் சிங் என்பவர், கடந்த 2014-ம் ஆண்டு, மனஅழுத்தம் காரணமாக சக வீரரர்கள் மூன்று பேரை தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்த அந்த வழக்கில், அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

தண்டனை பெற்ற விஜயபிரதாப் சிங்

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயபிரதாப் சிங் (52), 1990-ல் தொழில் பாதுகாப்புப் படை வீரராகப் பணியில் சேர்ந்தார். கல்பாக்கத்தில் பணியில் சேர்ந்த பிறகு, சக வீரர்கள் அவரை கிண்டல் செய்துவந்தனர். இதனால், மன இறுக்கத்துடன் பணிக்கு வந்துகொண்டிருந்தார். கடந்த 08.10.2014-ம் தேதி காலை 4.30-க்கு, சி.ஐ.எஸ்.எஃப். கட்டட முதல் தளத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏட்டு விஜயபிரதாப்சிங், பணிக்குக் கிளம்பியபோது, அங்கிருந்த அதிகாரிகளுக்கும் இவருக்கும் வாய்த் தகறாறு ஏற்பட்டது. கோபத்துடன் மாடியை விட்டு கீழே இறங்கிவந்த விஜயபிரதாப் சிங், மீண்டும் வேகமாக மாடிக்கு ஏறினார். உள்ளே படுக்கையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த தலைமைக் காவலர் மோகன் சிங் என்பவரை சரமாரியாக சுட்டுத்தள்ளினார். துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன், பணியில்  இருந்த பாதுகாப்புப் படையினர் அவரை பிடிக்க தயாராக இருந்தனர். கட்டுக்கடங்காத கோபத்துடன் வெளியேறியவர், அவரை மடக்க நினைத்த கூடுதல் உதவி ஆய்வாளர் கணேசன், சக வீரர்களான கோவர்தனன் பிரசாத், பிரதாப்சிங், சுப்புராஜ் ஆகியோர் மீது துப்பாக்கியால் சுட்டார். 20 ரவுண்டுகள் முடிந்த நிலையில் கணேசன், சுப்புராஜ் ஆகியோர் ரத்தவெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து இறந்தனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட கூடுதல் நீதிபதி ராமநாதன், “இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது. மூன்று பேரை கொலை செய்ததற்காக, மூன்று ஆயுள் தண்டணை மற்றும் ஒவ்வொரு கொலைக்கும் 4,000 வீதம் 12,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.  மேலும், மற்றவர்களைக் கொலைசெய்ய முயற்சித்ததற்காக, 10 ஆண்டுகள் சிறை தண்டணை மற்றும் 3,000 ரூபாய் அபராதமும் விதித்து.” தீர்ப்பளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க