`காவிரி விவகாரத்தில் துரோகம் செய்யும் மத்திய, மாநில அரசுகள்' - கூட்டாகக் கொந்தளித்த தலைவர்கள்! | Central and state governments betraying the Cauvery affair says thirumavalavan

வெளியிடப்பட்ட நேரம்: 06:08 (10/04/2018)

கடைசி தொடர்பு:08:06 (10/04/2018)

`காவிரி விவகாரத்தில் துரோகம் செய்யும் மத்திய, மாநில அரசுகள்' - கூட்டாகக் கொந்தளித்த தலைவர்கள்!

'உச்சநீதிமன்றம், மே 3-ம் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் நம்பவைத்துக் கழுத்தை அறுத்துவிட்டது' என்று திருமாவளவன் பேசியுள்ளார்.

                              

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் காவிரி உரிமை மீட்புப் பயணம், கடந்த 7-ம் தேதி, திருச்சி அடுத்த முக்கொம்பில் தொடங்கியது.

இதையடுத்து, காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் 2-வது குழு பொதுக் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. இதில்,  திராவிடர் கழக மாநிலத் தலைவர் வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் தலைவர் தொல் திருமாவளவன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயளாலர் பாலகிருஷ்ணன்,  தி.மு.க மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராஜா, தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி  ஆகியோர் கலந்துகொண்டனா். 

நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது, ``காவிரியில் நாம் கேட்ட அளவுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. நீதிமன்றத் தீர்ப்பில் மிகவும் குறைத்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எதிர்பார்ப்பதை நீதிமன்றம் தருகிறது. மத்திய அரசை நீதிமன்றம் தண்டித்திருக்க வேண்டும். ஆனால், அதுபோல நடக்க வாய்ப்பில்லை. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு, மேலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கவே வாய்ப்பாக அமையும். உச்ச நீதிமன்றம், மே 3-ம் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அதுபோல நீதிமன்றம் சொல்லவில்லை. வரைவு அறிக்கை திருத்தத்திற்கும் விவாதத்திற்கும் வழிவகுக்கும். மோடி அரசின் தமிழர் விரோதப் போக்கை அம்பலப்படுத்தவே இந்த மீட்புப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் முழுவெற்றி பெற்றது. மோலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும்'' என முடித்துக்கொண்டார்.

 திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது, ”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பொறுத்திருந்து கழுத்தை அறுத்த கதையாக உள்ளது. மத்திய அரசால் இந்தத் திட்டம் 6 வாரத்தில் உருவாக்கப்பட வேண்டும் என கூறிவிட்டு, தற்போது அது எந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப் போகிறீர்கள் என விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது. இது, தமிழக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த உச்ச நீதிமன்றமும் மத்திய, மாநில அரசுகளும் தமிழக மக்களை குழியில் தள்ளப்பார்க்கின்றன'' என்று கடுமையாக விமர்சனம் செய்தார். பிறகு, 2 - வது மீட்புக் குழுவை திராவி்டர் கழகத் தலைவா் வீரமணி தொடங்கிவைத்தார். பயணம், அரியலூர் மார்க்கெட் தெரு, தேரடி, சத்திரம், மாதாகோயில் தெரு வழியாகச் சென்று காமராஜா் திடலில் முடிவடைந்தது.

தலைவா்கள் அரியலூரில் இரவு தங்கி, நாளை காலை அரியலூா் மாவட்டம் கீழப்பழுவூரில் பயணம் தொடங்கி திருமானூா் செல்கின்றனா். பின்னா், தஞ்சாவூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டு, கும்பகோணத்தில் நாளை இரவு தங்குகின்றனா்.