வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (10/04/2018)

கடைசி தொடர்பு:07:38 (10/04/2018)

`ஊரணியில் விழுந்து இறந்த குடிமகன்' - நீண்ட தேடுதலுக்குப் பின் சடலத்தை மீட்ட தீயணைப்புத் துறை!

குடிபோதையில் ஊரணியில் குளித்த ஒருவர், நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுவளைவு, சேங்கை ஊரணியில் நேற்று (9.4.2018) மாலை, ஒருவர் மிதமான குடிபோதையில் தள்ளாடியபடியே, குளிப்பதற்காக ஊரணி படித்துறையில் இறங்கியிருக்கிறார். அவருடன் வந்த இருவர் கரையிலேயே அமர்ந்துவிட்டார்கள். கொஞ்சநேரம் நீரில் மூழ்கி நீச்சல் அடித்து, கரையில் அமர்ந்திருந்த இரண்டு நண்பர்களுக்கு வேடிக்கை காட்டி  யிருக்கிறார். அதன்பிறகு, நீருக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருக்கவே, சந்தேகம் அடைந்த நண்பர்கள் பதறிவிட்டார்கள். உள்ளூர் நபர்களின் ஒத்துழைப்புடன்  உடனடியாக  தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். கொஞ்ச நேரத்தில் அலுவலர் பாண்டியராஜன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்தார்கள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தேடி, சடலத்தை மீட்டனர். 

இதுகுறித்து போலீஸார் கூறும்போது,  ``திருப்பூரைச் சேர்ந்தவர் முருகன் (56). பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு கோயில் திருவிழாவுக்கு தன் இரண்டு நண்பர்களுடன்  வந்திருக்கிறார். திருவிழாவில் கலந்துகொண்ட பின், குடித்துவிட்டு சேங்கை ஊரணி படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார்கள். இதில், முருகன் மட்டும் குளிக்க இறங்கியிருக்கிறார்.பிறகு முருகனைக்  காணவில்லை. உடன் வந்த நண்பர்கள் தீயணைப்புத்துறை மீட்புப் படை மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குத் தெரியப்படுத்தினர். அதன்பிறகு, 4 மணி நேரம் தேடி அவரை மீட்டோம்" என்றார்கள். 

சம்பவ இடத்தில், பொன்னமராவதி காவல் உதவி ஆய்வாளர் முத்துக்கருப்பன், பிரபாகரன் ஆகியோர் விசாரணை செய்து,  அவரின் நண்பர்களிடம் சடலத்தைக் கொடுத்து, திருப்பூருக்கு அனுப்பி வைத்தனர்.  

சமீபத்தில், இதேபோல ஒருவர் சேங்கை ஊரணியில் விழுந்து இறந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது. தவிர, வெளியூர் நபர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக எச்சரிக்கைப் பலகை ஒன்றும் இந்த ஊரணிப் பகுதியில் வைக்க வேண்டும் என்று பொன்னமராவதி மக்கள் கூறுகின்றனர்.