வெளியிடப்பட்ட நேரம்: 09:36 (10/04/2018)

கடைசி தொடர்பு:09:36 (10/04/2018)

சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது! #WeWantCMB

திருச்சியில், காவிரி விவகாரத்துக்காக  சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள்  நடைபெற்றுவருகின்றன.

நாம் தமிழர் கட்சி

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நேற்று திருச்சி மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிவரும் முக்கொம்பு தடுப்பணையில் விவசாய சங்கத்தினர், பொதுமக்கள், சிறுவர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி துவாக்குடியில் உள்ள தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை, நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு தலைமையில், சட்டமன்றத் தொகுதி செயலாளர்கள் சோழசேரன், கண்ணன் மற்றும் மகளிரணியைச் சேர்ந்த லட்சுமி, காமில்பானு, ஷாகிராபானு உள்ளிட்ட 34 பேர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சுங்கச்சாவடி கட்டணம் வசூல்செய்ய தடைசெய்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த  திருவெறும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சேகர் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரையும் கைதுசெய்தனர்.  கைதுசெய்யப்பட்ட 34பேர் மீது,  பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து,  திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அரசைக் கண்டித்து, இந்தி பிரசார சபாவில் இருந்த பெயர்ப்பலகை மற்றும் இந்தி எழுத்துகளை கறுப்பு மை பூசி அழித்த மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, இதேபோன்று சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க