வெளியிடப்பட்ட நேரம்: 09:57 (10/04/2018)

கடைசி தொடர்பு:14:58 (10/04/2018)

''தமிழிசையின் பேச்சு சர்வாதிகாரத்தின் உச்சம்!'' - வலுக்கும் எதிர்ப்பு

''தமிழிசையின் பேச்சு சர்வாதிகாரத்தின் உச்சம்!'' - வலுக்கும் எதிர்ப்பு

''ராணுவத்துக்குப் பயப்படாதவர்கள்கூட ஐ.டி.ரெய்டுக்குப் பயப்படுவார்கள்'' என ஹெச்.ராஜா ஸ்டைலில், பேசியிருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்! தமிழக பி.ஜே.பி-யில் எப்போதுமே சர்ச்சைப் பேச்சுக்களுக்குப் பெயர் வாங்கியவர் அக்கட்சியின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா. ஆனால், ஞாயிற்றுக்கிழமை (8-4-2018) அன்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற 'தாமரை யாத்திரை நிறைவுநாள்' பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்துப்பேசிய நடிகர்களை மிரட்டும் விதமாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் வார்த்தைகள் அனைவரையும் ஆச்சர்ய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ரஜினி


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்த் திரையுலகினர், ஞாயிற்றுக்கிழமை (8-4-2018) சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மவுனப் போராட்டம் நடத்தினர். இதில் பேசிய நடிகர் சத்யராஜ், ''தமிழர்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்.  ராணுவமே வந்தாலும் நாங்கள் அஞ்சமாட்டோம்'' என ஆவேசமாகப் பேசியிருந்தார். மேலும், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா என்பவரை நியமித்திருப்பது குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''காவிரிப் போராட்டம் தீவிரமாகிவரும் இந்தச் சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவரை நியமித்திருப்பது தவறு'' என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராக நடிகர்கள் சத்யராஜ், ரஜினிகாந்த் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகளுக்குப் பதில் அளிக்கவேண்டிய கடமையில் இருந்தார் தமிழிசை சௌந்தரராஜன். அதற்கான வாய்ப்பாக, கட்சியின் பொதுக்கூட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு பேசியவர், ''ராணுவத்தைக் கண்டு பயப்படமாட்டோம் என்று கூறுபவர்கள், ஐ.டி. ரெய்டு வந்தால் எப்படி பயப்படுவார்கள் என்று எங்களுக்குத் தெரியாதா? உங்களுக்கெல்லாம் ராணுவம் எதற்கு?'' என்று முதலில் சத்யராஜுக்குப் பதிலடி கொடுத்தார். அடுத்ததாக ரஜினிகாந்தின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும்விதமாகப் பேசியவர், ''பல ஆண்டுகளுக்கு முன்னால் கன்னடர் ஒருவரின் நடிப்பைப் பார்க்கமாட்டேன் என்று தமிழர்கள் சொல்லியிருந்தால், ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பாரா?'' என்றும் கேள்வி எழுப்பினார். 
எப்போதும் வார்த்தைகளைக் கவனமாகக் கையாளும் தமிழிசை சௌந்தரராஜன், 'மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை அடக்க, வருமான வரித்துறையை அனுப்புவோம்' என்ற ரீதியில் நடிகர் சத்யராஜை மிரட்டியிருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற சர்ச்சைப் பேச்சுக்களில் ஹெச்.ராஜாவின் பெயர் அடிபடும். ஆனால், இந்த முறை ஹெச்.ராஜாவும் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில், அவரையும் மிஞ்சும் விதமாக தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் விமர்சகர்கள், ''தமிழகத்தில் காவிரி பிரச்னை என்பது தற்போது உச்சகட்ட கொதிநிலையில் இருந்துவருகிறது. ஆனாலும்கூட இவ்விஷயத்தில், கடந்த காலங்களிலிருந்து தற்போதைய நிலைவரை  முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்தே தேசியக் கட்சிகள் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துவருகின்றன. எனவே, இதில் காங்கிரஸ் - பி.ஜே.பி என்று எந்தப் பாகுபாடும் இல்லை.


சத்யராஜ்


மத்திய பி.ஜே.பி அரசு, தமிழக ஆட்சியாளர்களை மிரட்டிப் பயமுறுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதை நிரூபிக்கும் விதமாக மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பவர்களது வீடுகளில் அடுத்தடுத்து வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதையும் தமிழகம் பார்த்துவந்திருக்கிறது. இந்நிலையில், பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவரே, 'வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்படும்' என நேரடியாக சத்யராஜை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது அரசியல் அநாகரிகம். கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்களே பேசத் தயங்கும் வார்த்தையை கட்சியின் தலைவரே பேசியிருக்கிறார். இது அவர்களது சர்வாதிகாரத்தனத்தை பட்டவர்த்தனமாக்கி இருக்கிறது. 

தமிழிசைஅதுமட்டுமல்ல... 'மேலாண்மை வாரியம் அமைக்காவிடில், தமிழக மக்களின் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாக நேரிடும்' என்ற எதார்த்தத்தைத்தான் ரஜினிகாந்த் வெளிப்படுத்தியுள்ளார். 'காவிரிப் பிரச்னை உச்சகட்டத்தில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில், துணை வேந்தராக கன்னடர் ஒருவரை நியமிக்கலாமா?' என்ற அவரது கேள்வியும்கூட அரசை நோக்கிய ஆக்கபூர்வமான விமர்சனமாகத்தான் இருக்கிறதே தவிர... நேரடியானத் தாக்குதல் எதுவும் இல்லை. ஆனால், இதற்குப் பதிலடியாக ரஜினிகாந்த்தை `கன்னடர்' என்ற இன அடையாளத்துக்குள் நிறுத்தி தமிழிசை எழுப்பியிருக்கும் கேள்வியானது அப்பட்டமான இனத் துவேஷ அரசியல்!'' என்கின்றனர்.
இதற்கிடையில், தமிழிசை சௌந்தரராஜனின் பேச்சுக்குப் பதில் கொடுக்கும்விதமாக, ''தமிழிசை சௌந்தரராஜன் என்னைப் பார்த்துப் பயப்பட வேண்டியத் தேவை எதுவும் இல்லை. ஏனெனில், என்னிடம் அரசியல் சார்ந்த எந்தத் திட்டமும் இல்லை. என்னளவில் நான் நேர்மையாகவே இருந்துவருகிறேன்!'' என்று அவருக்கே உரிய பாணியில் விளக்கம் கொடுத்திருக்கிறார் நடிகர் சத்யராஜ்!
'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்!' என்ற முதன்மையான கோரிக்கையைப் பின்னுக்குத் தள்ளும் விதமாக பிரச்னையை திசை திருப்பும் அரசியல் விளையாட்டுகள் ஆரம்பித்திருக்கின்றன... எனவே, மக்கள் விழிப்புடன் போராட வேண்டிய தருணம் இது!


டிரெண்டிங் @ விகடன்