வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (10/04/2018)

கடைசி தொடர்பு:10:50 (10/04/2018)

``காடுகள் பாதுகாக்கப்பட்டால்தான் காவிரி ஓடும்!" - அரசுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அட்வைஸ்

தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் ரணமே ஆரவில்லை.  இதனிடையே, தமிழக வனப்பகுதிகளில் 49 இடங்களில் வனத் தீ எரிந்து வருவதாக, தமிழக அரசுக்கு வனத்துறை அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துக்கு மனிதர்களே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் ரணமே ஆரவில்லை.  இதனிடையே, தமிழக வனப்பகுதிகளில் 49 இடங்களில் வனத் தீ எரிந்துவருவதாக, தமிழக அரசுக்கு வனத்துறை அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துக்கு மனிதர்களே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காடுகள்

இதுகுறித்து நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாசார சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் கூறுகையில், “தமிழக வனப்பகுதிகளில் தீப்பற்றுவதற்கு, 99 சதவிகிதம் மனிதர்களே காரணம். வனத்துறையைப் பழிவாங்க, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போன்ற ஏராளமான காரணங்களுக்காக வனப்பகுதிகளில் தீ வைக்கின்றனர். அதேபோல, கஞ்சா விற்பவர்கள், சந்தன மரம் கடத்துபவர்கள் போன்ற சமூக விரோதிகளும் வனத்தில் தீ வைக்கின்றனர். இதனால், மருத்துவப் பலனுள்ள ஏராளமான செடிகள் அழிந்துபோகின்றன. செடிகள் அழிந்து போவதால், பறவைகளுக்கு உணவு கிடைக்காமல்போகிறது. குறிப்பாக, இது பறவைகள் குஞ்சு பொரிக்கும் காலகட்டம். இப்போது அவற்றுக்கு உணவு கிடைக்காவிட்டால், அவை மிகப்பெரிய இன்னல்களைச் சந்திக்கும்.

சிவதாஸ்அதேபோல பாம்பு, சிறுசிறு பூச்சிகள் போன்ற ஊர்வனங்கள் வனத்தீயிலிருந்து தப்பிக்க முடியாது. வனப்பகுதிக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. வனத்தீயை கண்டறிவதற்காக, பல லட்சம் டவர்களை அமைத்தனர். ஆனால், அதற்கு யார் தீ வைக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதுதானே முக்கியம். எனவே, உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வனப்பகுதியைக் கண்காணிக்கலாம்.

வனப் பகுதிகளை ஒட்டியுள்ள மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இப்போது காவிரிக்காக நாம் போராடிவருகிறோம். தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்கள் சந்திக்கும் எல்லையில்தான் காவிரி உருவாகிறது. ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்து, காவிரிக்கு அனுப்புவதற்கு முக்கியக் காரணம் வனம்தான். எனவே, நீராதாரம் கிடைக்க, வனங்களைக் காப்பது மிகவும் முக்கியம். காடுகள் பாதுகாக்கப்பட்டால்தான் காவிரி ஓடும். அதை அழித்துவிட்டு, நீர் ஆதாரத்தைக் கேட்பது எந்த விதத்தில் நியாயம்?  நொய்யல் போன்ற நதிகள் வற்றியதற்கு, வனப்பகுதி குறைந்ததே முக்கியக் காரணம். குறிப்பாக, நீர்வளத்தைப் பெருக்க புலிகளைக் காப்பதும் மிகவும் அவசியமான ஒன்று” என்றார்.