வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (10/04/2018)

கடைசி தொடர்பு:13:00 (10/04/2018)

மேடையை நோக்கிப் பாய்ந்த பெட்ரோல் குண்டு! - பதறியடித்து ஓடிய அனைத்துக் கட்சியினர்

தி.மு.க சார்பில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், மேடையை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

திமுக பொதுக்கூட்டம்

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.க சார்பில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற கண்டனப் பொதுக்கூட்டம், புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது. திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மாநிலத் தலைவர் கி.வீரமணி, மத்திய அரசைக் கண்டித்து பேசிக்கொண்டிருந்தபோது, 7.45 மணிக்கு மேடையின் பின்புறமாக வந்த வாலிபர், மேடையை நோக்கி பெட்ரோல் குண்டை வீசினார்.

திமுக கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

குண்டு, குறி தவறி மேடைக்கு முன் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து எரிந்தது. இதனால், மேடையிலிருந்த அனைவரும் பதறியடித்துக் கீழே இறங்கி ஓடினர். தலைவரின் பேச்சைக் கேட்க வந்த அனைவரும் தலை தெறிக்க ஓடினர். மேடையின் பின்புறம் குண்டை வீசிவிட்டுத் தப்ப முயன்ற வாலிபரைப் பொதுமக்கள் வளைத்துப்பிடித்துத் தாக்கினர்.

பொதுமக்களிடமிருந்து வாலிபரை மீட்ட காவல்துறை, அவரை உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். தகவலறிந்த கட்சியினரும், பொதுமக்களும் காவல் நிலையத்தின் முன் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிடிபட்ட நபர்,  நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச்  சேர்ந்த வேல்முருகன் (34) என்பதும், அவர் புதுச்சேரி ஓட்டலில் தங்கி வேலை செய்துவந்ததும் தெரியவந்தது.நேற்று அவர் அளவுக்கதிகமாக பீரை குடித்துவிட்டு, அந்த பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பொதுமக்கள் கூட்டத்தில் மேடையை நோக்கி வீசியதாகத் தெரியவந்துள்ளது.

மேடையில், குறிப்பிட்ட சாதியைப் பற்றிப் பேசியதால் ஆத்திரமடைந்து, பெட்ரோல் குண்டு வீசியதாக விசாரணையில் கூறியுள்ளார். பொதுமக்கள் தாக்கியதால் தன்னிலை மறந்து உளறிவருகிறார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இருந்தும், விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று கூறியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க