வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (10/04/2018)

கடைசி தொடர்பு:10:48 (10/04/2018)

நீட் பயிற்சி மைய வணிகத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்! 

ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் கல்வி சார்ந்த தகவல் சேவையில் இறங்க முடிவு செய்துள்ளது. இதன்முதல்கட்டமாக, 100 கோடி ரூபாய் முதலீட்டில் கல்வி சேவை நிறுவனத்தை வாங்க உள்ளது.

நீட் பயிற்சி மைய வணிகத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்! 

ஜியோ வெற்றியைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய வியாபாரத்தை பல்வேறு பிரிவுகளில் விரிவாக்கம்செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நுழைவுத்தேர்வு பயிற்சி மைய வியாபாரத்திலும் இறங்க முடிவுசெய்திருக்கிறது. 

ரிலையன்ஸ்

இனி, மருத்துவப் படிப்பும் பொறியியல் படிப்பும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டுமானால், நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால்தான் முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இதனால், நுழைவுத்தேர்வுகள் மிகப்பெரிய வணிகமாக மாறிவருகிறது. இதை வைத்து, பயிற்சி நிறுவனங்கள் பல கோடி ரூபாய் பணம் பார்த்து வருகின்றன. இதையெல்லாம் கவனித்த ரிலையன்ஸ் நிறுவனம், முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் முதலீடு செய்து, 'எம்பிபி' (embibe) என்ற ஆன்லைன் சேவை நிறுவனத்தை வாங்க முயற்சி எடுத்து வருகிறது. 

எம்பிபி இணையத்தளம், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளுக்கு ஆன்லைன்மூலம் பயிற்சி வழங்கி வருகிறது. இதற்கான அலுவலகம் மும்பையில் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனம், அமெரிக்காவில் வசிக்கும் சந்தீப்மூர்த்தி என்பவரின் நிதி உதவியுடன்,  அதிதி அவஸ்தி என்ற பெண்மணியால் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தில், இரண்டு நிறுவனங்கள் 25 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருக்கின்றன. 

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானியின் மகன்களும், மகளும் இயக்குநர்களாக இருக்கின்றனர். இவர்களின் விருப்பப்படி பல்வேறு மாற்றங்கள் நடந்துவருகின்றன. மூத்த மகன் ஆகாஷ் ஆலோசனையின் அடிப்படையிலேயே ஜியோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தற்போது, வெளிநாட்டில் படித்து முடித்து இந்தியாவுக்கு வந்திருக்கும் முகேஷின் மகள் ஈஷா, தனது விருப்பப்படி கல்வி வலைதள நிறுவமான எம்பிபி என்ற நிறுவனத்தை வாங்க விரும்பியதாகவும், இதற்காக விலை பேசிய ரிலையன்ஸ் நிறுவனம், 100 கோடி ரூபாய் வரை வழங்க முன் வந்திருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது. 

இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்க, எந்தவிதமான இடைத்தரகர்களையும் அணுகாமல், நேரடியாகக் களம் இறங்கியிருக்கிறது ரிலையன்ஸ். ஏற்கெனவே, பல்வேறு தகவல் சார்ந்த பணிகளைச் செய்தாலும், கல்வி சார்ந்த தகவல் சேவையில் இறங்காமல் இருந்தது ரிலையன்ஸ். இந்தத் தளத்தை வாங்குவதன்மூலம், கல்வித் தகவல் சேவையிலும் கால்பதிக்க உள்ளது. இதன்மூலம், எதிர்காலத்தில் நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சிகள், 100 ரூபாய், 200 ரூபாயில் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது!