மீண்டும் முடக்கப்படுகிறதா இரட்டை இலைச் சின்னம்? | two leaves symbol of AIADMK to be banned again by EC

வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (10/04/2018)

கடைசி தொடர்பு:10:46 (10/04/2018)

மீண்டும் முடக்கப்படுகிறதா இரட்டை இலைச் சின்னம்?

மீண்டும் முடக்கப்படுகிறதா இரட்டை இலைச் சின்னம்?

ரட்டை இலை தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கின் தீர்ப்பால், மீண்டும் இரட்டை இலை முடங்கும் அபாயம் ஏற்பட்டிருப்பது பரபரப்பை  உண்டாக்கியுள்ளது.

இரட்டை இலை

அ.தி.மு.க-வில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் போர்க்கொடியால் இரட்டை இலைச் சின்னம் கடந்த ஆண்டு முடக்கப்பட்டது. அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே சமரசம் நடைபெற்ற பிறகு, கடந்த டிசம்பர் மாதம் இரட்டை இலைச் சின்னம் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிக்கு மீண்டும் வழங்கப்பட்டது. இதற்கிடையில், இரட்டை இலைச் சின்னம் தங்கள் தரப்புக்கு வேண்டும் என்று டி.டி.வி தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்தில் அளித்திருந்த மனுவையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு  மனுத் தாக்கல் செய்திருந்தது. 

அதேநேரம் தினகரன் தரப்பு தனி அமைப்பும், சின்னமும் பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது. அதன்தொடர்ச்சியாக தினகரன் தரப்பு, `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பையும், ஜெயலலிதா படத்துடன்கூடிய மூவர்ணக் கொடியையும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தது. மேலும், தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டது. தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டதற்குத் தடை விதித்ததோடு, இரட்டை இலை தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் முடித்து வைக்க வேண்டும் என்றும் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. 

தினகரன்- கே.சி.பழனிசாமி

உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவுதான் மீண்டும் இரட்டை இலையை முடக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. தினகரன் தரப்பினர், 'இரட்டை இலைச் சின்னத்தை எப்படியும் கைப்பற்ற வேண்டும் அல்லது அந்தச் சின்னத்தை தற்காலிகமாக முடக்க வேண்டும்' என்ற முடிவில் தீவிரமாக உள்ளனர். இரட்டை இலைச் சின்னம் ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்குக் கொடுக்கப்பட்டது தவறு என்ற ரீதியில் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், இவ்வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க- விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
 இந்த மனு இரட்டை இலை தொடர்பான வழக்கில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள். குறிப்பாக கே.சி.பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், 'அ.தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கை என்பதே அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், இந்த விதியை மாற்றி ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்கியிருப்பது அ.தி.மு.க-வின் விதிகளுக்கே முரணானது. ஆகையால், பொதுச்செயலாளர் தேர்வை முறைப்படி நடத்திமுடிக்க வேண்டும். பொதுச்செயலாளர் தேர்வுக்குப் பிறகுதான் கட்சியும், சின்னமும் வழங்க வேண்டும்' என்று மனுத் தாக்கல் செய்துள்ளார். 

ஏற்கெனவே இரட்டை இலை வழக்கில், சில சட்டச் சிக்கல்களை தினகரன் தரப்பு கையில் எடுத்துவரும் நிலையில், கே.சி.பழனிசாமி தாக்கல் செய்துள்ள இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், இரட்டை இலை விவகாரத்தில் மீண்டும் குழப்பம் ஏற்படும். எனவே, மீண்டும் இரட்டை இலை முடங்குவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள் சட்டநிபுணர்கள். இரட்டை இலையை மீட்க வேண்டும் அல்லது முடக்க வேண்டும் என்ற இரண்டு விஷயங்களைத்தான் தினகரன் தரப்பு கையில் எடுத்துள்ளது. அதற்குத் தோதாக இப்போது கே.சி.பழனிசாமி தரப்பு மனுத் தாக்கல் செய்திருப்பது ஓ.பன்னீர்செல்வம் அணியை யோசிக்க வைத்துள்ளது!


டிரெண்டிங் @ விகடன்