வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (10/04/2018)

கடைசி தொடர்பு:11:38 (10/04/2018)

'பாதி விடைத்தாள்களைத்தான் திருத்துவோம்'- சம்பளத்துக்காகப் போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கம்

6ம் வகுப்பு ஆசிரியர்களைவிட மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளம் வழங்கப்படுவதைக் கண்டித்தும், கோடை விடுமுறை எடுக்க முடியாத அளவுக்கு விடைத்தாள் திருத்தும் பணி இருப்பதைக் கண்டித்தும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாகப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

6-ம் வகுப்பு ஆசிரியர்களைவிட, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளம் வழங்கப்படுவதைக் கண்டித்தும், கோடை விடுமுறை எடுக்க முடியாத அளவுக்கு விடைத்தாள்கள் திருத்தும் பணி இருப்பதைக் கண்டித்தும், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாகப் போராட்டம் அறிவித்துள்ளன.

ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு


முதுகலை ஆசிரியர்கள், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு, 6-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்குவதைவிட குறைந்த சம்பளம் வழங்குவதைக் கண்டித்து, பாதி விடைத்தாள்களை மட்டும் திருத்தும் பணியில் ஈடுபடும் போராட்டம் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் மணிவாசகம் பேசும்போது, ''முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 6-ம் வகுப்பு ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்தைவிட மாதம் தோறும் 3,500 ரூபாய் குறைவான சம்பளம் வழங்கப்பட்டுவருகிறது. இதைக் கண்டித்து, வரும் 12-ம் தேதி தொடங்கும்  12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில், பாதி வேலை மட்டும் செய்ய இருக்கிறோம். அதாவது, ஒவ்வொரு ஆசிரியரும் தினமும் 20 விடைத்தாள்கள் திருத்துவதற்கு பதில், 10 விடைத்தாள்கள் மட்டும் திருத்தும் போராட்டம் நடத்த இருக்கிறோம்'' என்றார்.

ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகம்


இது ஒருபுறம் இருக்க, 12 மற்றும் 11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி, மே மாதம் முழுவதும் நடப்பதால், கோடை விடுமுறை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிப்பதாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் செயற்குழுக் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றிவருகிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக குமரி மாவட்டத் தலைவர் இளங்கோ பேசுகையில், ''விடைத்தாள் திருத்தும் பணி மே மாதம் முழுவதும் நடப்பதால், கோடை விடுமுறை எடுக்க முடியாத நிலை முதுநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் வேலை செய்யும் முதுநிலை ஆசிரியர்களுக்கு, சற்று இளைப்பாறுதல் வழங்கும் கோடை விடுமுறையை வழங்காமல் இருப்பது நியாயம் இல்லை. எனவே, எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 30-ம் தேதி, அனைத்து முதுகலை ஆசிரியர்களும் விடைத்தாள் புறக்கணிப்புப் படிவங்களில் கையெழுத்திட்டு, முகாம் அலுவலரிடம் கொடுக்க இருக்கிறோம். மே மாதம் 1-ம் தேதி, விடைத்தாள் முழுவதும் திருத்தும் பணியைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்துகிறோம். அதற்கு முன்னோட்டமாக, வரும் 12-ம் தேதி, விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் செய்வது, 17-ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணிவரை அடையாள புறக்கணிப்பில் ஈடுபடுவது, வரும் 25-ம் தேதி, ஒரு மணிநேரம் தாமதமாக விடைத்தாள் கட்டுகளைப் பெற்றுக்கொள்வது போன்ற போராட்டங்களில் ஈடுபடுகிறோம்'' என்றார்.