ஐ.பி.எல் கிரிக்கெட்டால் எங்களுக்கு தொல்லைதான்! - சின்னத்திரை இயக்குநர்கள் குமுறல் | serial directors slams IPL

வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (10/04/2018)

கடைசி தொடர்பு:12:52 (10/04/2018)

ஐ.பி.எல் கிரிக்கெட்டால் எங்களுக்கு தொல்லைதான்! - சின்னத்திரை இயக்குநர்கள் குமுறல்

ஐபிஎல் போட்டிகளால் சீரியல்களின் டிஆர்பி அடிவாங்குவதாக சீரியல் இயக்குநர்கள் கூறுகிறார்கள்

'ஐபிஎல் போட்டிகளைத் தமிழகம் புறக்கணிக்க வேண்டும்' என்கிற கோரிக்கைகளுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் செவி சாய்ப்பார்களா தெரியவில்லை. ஒருவேளை, 'தமிழ்நாட்டில் மட்டும் மேட்சுகள் இல்லை' என அறிவிக்கப்பட்டால், அதைக் கொண்டாடித் தீர்க்கப் போகிறவர்களில் முக்கியமானவர்கள், சீரியல் இயக்குநர்கள்தான். 'இந்த முறை காவிரியை வர வைக்கவும், ஸ்டெர்லைட்டை விரட்டவும் வேண்டி நடக்கும் போராட்டங்களால, எல்லாரும் ஐபிஎல்-லை எதிர்க்கிறாங்க. ஆனா, எங்களுக்கு வருஷா வருஷம் ஐபிஎல் போட்டிகளால தொல்லைதான்' என்கிற இவர்களிடம், 'என்ன பிரச்னை' என்றோம்.

ஐபிஎல்

''வீடுகள்ல ரிமோட் கை மாறுவதுதான் பிரச்னை. முன்னாடியெல்லாம் சீரியல்னா பெண்கள் மட்டுமே பார்ப்பாங்கன்னு இருந்தது. இப்ப அப்படியில்லை. பல வீடுகள்ல, ஆபீஸ் விட்டு வந்துட்டா ஆண்களே சீரியலைப் பார்க்க உட்கார்ந்துடுறாங்க. ஆண்களும் பெண்களுமா குடும்பத்தோட உட்கார்ந்து சீரியல் பார்க்கறப்ப, சீரியல்களுக்கு நல்ல ரேட்டிங் கிடைக்குது.

இப்படி இருக்கயில ஐபிஎல் தொடங்கிடுச்சுனா சீரியலை விட்டுட்டு மேட்ச் பார்க்கத் தொடங்கிடுறாங்க. எப்படி சீரியலை ஆண்கள் பார்க்கத் தொடங்கியிருக்காங்களோ, அதேபோல இந்தப் பக்கம் பெண்கள்லயும் கணிசமான பேர் கிரிக்கெட்டை விரும்பிப் பார்க்கிறாங்க. அதனால, ஆணும் பெண்ணுமா அப்படியே கிரிக்கெட்டுக்குத் தாவிடுறாங்க. இதனால, சீரியல்களோட ரேட்டிங் அடிபடுது. பார்வையாளர்களை நகர விடாம பார்த்துக்கிறதுக்கு நாங்களும் எவ்ளோ ட்விஸ்ட்தான் வைக்கிறது' என்கிறார், 'சின்னத் தம்பி' தொடரின் இயக்குநர் பிரான்சிஸ் கதிரவன்.

ஐபிஎல்

''கடந்த ரெண்டு வருஷமா கொஞ்சம் ரிலாக்ஸா இருந்தோம். ஏன்னா சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடலை. நம்மூர் மக்களுக்கு மத்த அணிகளைவிட சிஎஸ்கே மேல பிரியம் ஜாஸ்தி. இந்த வருஷம் அது மறுபடியும் களம் இறங்கியிருக்கு. 4 மணி மேட்ச்சோட க்ளைமேக்ஸ் போகிற நேரம், 'ராஜா ராணி' தொடரும், 7 மணி மேட்ஸ் டைம்ல 'சரவணன் மீனாட்சி'யும் ஒளிபரப்பாகிட்டிருக்கு. என்னோட இந்த ரெண்டு சீரியல்களுமே இந்த மேட்சுகளால பாதிக்கப்படும்னு நினைக்கிறப்ப கொஞ்சம் கலவரமாத்தான் இருக்கு. ஏதாவது செய்யணும்' என்கிறார் மேற்கண்ட இரு தொடர்களையும் இயக்குகிற பிரவீன் பென்னெட்.

பொதுவா, சீரியல் காட்சிகளில் அதிரடித் திருப்பங்களை வார இறுதி நாள்களில் மட்டுமே வைப்பார்கள். 'ஐபிஎல் தொடங்கினதுல இருந்து போட்டிகள் நடக்கிற நாள்கள்ல மட்டும் வாரத்துக்கு ரெண்டு மூணு ட்விஸ்ட்களை வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுறோம்' என்கிறார்கள் சில இயக்குநர்கள்.

ஐபிஎல் நாள்களில் சீரியலுக்கு ரேட்டிங் குறைவதை விரும்பாத சில சேனல்களே, இந்த நாள்களில் தொடர்ச்சியாக ட்விஸ்ட்களை வைக்கும்படி சின்னத்திரை தயாரிப்பாளர், இயக்குநர்களைக் கேட்டுக்கொள்வதும் நடக்கிறதாம்.