Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`ஐ.பி.எல் பார்க்கவில்லை என்றால் தலை வெடித்துவிடுமா..?’ ரசிகர்களைச் சீண்டும் ஜெயக்குமார்

ஐபிஎல் போட்டிகளைக் காண பலத்த கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அதை ஏன் சென்று பார்க்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயகுமார்

இன்று காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `` காவிரி விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் அளித்துவருகிறது. நடுவர் மன்றத் தீர்ப்பாயத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது என்று நேற்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. எனவே, நடுவர்மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என நம்புகிறோம்.

`'பிரதமர் மோடி வருகையின்போது எதிர்க்கட்சிகள் 'கறுப்புக்கொடி காட்டுவோம்' என அறிவித்திருந்தார்கள். அதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம்' எனக் கூறியிருந்தார். இதற்கு உங்கள் கருத்து'' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ''அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்த பச்சைக்கொடி என்பது பசுமை. விவசாயிகளைக் குறிக்கும். விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் நல்ல முடிவை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே பச்சைக்கொடி காட்டுவோம் என அமைச்சர் கூறியிருப்பார்.

பிற மாநிலங்களுக்கு, மத்திய அரசிடம் பேசி காரியத்தைச் சாதிக்கும் அளவுக்கு அறிவு இல்லை. ஆனால், நாங்கள் மத்திய அரசிடம் எப்படிப் பேசவேண்டுமோ அப்படி சாமர்த்தியமாகப் பேசி, தமிழகத்துக்கான திட்டங்களையும் சலுகைகளையும் நிறைவேற்றிவருகிறோம், எங்களுக்கு இருக்கும் சாமர்த்தியமும் அறிவும் பிற மாநிலத்தவர்களுக்கு இல்லை. எனவேதான், அவர்கள் மத்திய அரசை எதிர்க்கிறார்கள். 

ஸ்டாலின், அ.தி.மு.க ஆட்சியைப் பற்றிக் குறைகூறுவது ஒன்றும் புதிதல்ல. ஸ்டாலின் வீட்டில் சமையல் செய்யவில்லை என்றால்கூட அதற்கும் நாங்கள்தான் காரணம் எனக் கூறுவார். தமிழகத்தில் நடைபெற்ற பல முறைகேடுகளுக்கு தி.மு.க அரசுதான் காரணம் என்பதை ஸ்டாலின் மறந்துவிட்டுப் பேசுகிறார்.

ஐபிஎல் தொடர்பாக எந்த நிலைப்பாட்டையும் அ.தி.மு.க அரசு வழங்க முடியாது. போட்டிகள் நடத்துவதும் நடத்தாமல் இருப்பதும் கிரிக்கெட் வாரியம்தான் முடிவுசெய்ய வேண்டும். தமிழகத்தில் நடக்கும் நிலைகுறித்து நாங்கள் ஏற்கெனவே கிரிகெட் வாரியத்திடம் பேசிவிட்டோம். அதற்கு அவர்கள், 'போட்டி ஏற்பாடுகள் முழுவதும் நிறைவடைந்துவிட்டன. தற்போது அதை மாற்ற முடியாது' எனக் கூறிவிட்டனர்.

இன்று, சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளைக் காண பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வளவு கட்டுப்பாடுகளுடன் அந்தப் போட்டியைப் பார்க்க வேண்டுமா? கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்காமல் இருந்தால், உங்கள் தலை வெடித்துவிடுமா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement