வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (10/04/2018)

கடைசி தொடர்பு:14:09 (10/04/2018)

 'இப்படிச் செய்துவிட்டாயே பாவி' - பாலகணேஷிடம் பாய்ந்த ஞானப்பிரியாவின் சகோதரர்கள் 

 
  

  பாலகணேஷ்

 சென்னை வடபழனியில், மனைவியைக் கொலைசெய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீஸார் கைதுசெய்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும், ஞானப்பிரியாவின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள், வடபழனி போலீஸ் நிலையத்துக்கு ஆத்திரத்தோடு வந்தனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர். 

 சென்னை வடபழனி, தெற்கு சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், பிரபு என்கிற பாலகணேஷ். இவரது மனைவி ஞானப்பிரியா, கடந்த 5-ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்  கொலை செய்யப்பட்டு, வீட்டுக்குள் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, பாலகணேஷ், அவரது நண்பர் மனோஜ்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

 இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாலகணேஷ், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஞானப்பிரியா, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பாலகணேஷ் குடும்பமும்  ஞானப்பிரியாவின் குடும்பமும் கோயில் சம்பந்தமான பணிகளைச்  செய்துவருபவர்கள். 7-ம் வகுப்பு வரை படித்த பாலகணேஷ், அதன்பிறகு பழவேற்காடு அருகில் உள்ள திருப்பாலைவனத்தில் செயல்படும் வேதபாடசாலையில் ஐந்து ஆண்டுகள் வேதம் கற்றுக்கொண்டார். அங்குதான் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜ் அறிமுகமாகியுள்ளார். மனோஜ் சீனியர் மாணவர் என்றாலும், பாலகணேஷிடம் நெருங்கிப் பழகியுள்ளார். இதனால், இருவரும் இணைபிரியா நண்பர்களாகியுள்ளனர். 

 திருமண முடிந்த பிறகு பாலகணேஷ், வடபழனியில் உள்ள சிவன் கோயிலில் தற்காலிக குருக்களாகப் பணியாற்றியுள்ளார். மனோஜ், பூந்தமல்லி பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். இருப்பினும் அடிக்கடி இருவரும் சந்தித்துவந்துள்ளனர்.   இந்த நிலையில்தான், பாலகணேஷுக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஞானப்பிரியாவுடன் திருமணம் நடந்துள்ளது. இவர், பி.எஸ்சி. பட்டதாரி. ஆரம்பத்தில் இவர்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாகச் சென்றுள்ளது. வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள 200 சதுர அடி பரப்பரளவுகொண்ட வீட்டில், கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு வாடகைக்கு குடி வந்துள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே குழந்தை இல்லாத பிரச்னை நீண்ட காலமாக  இருந்துவந்துள்ளது. இதனால் மனவேதனையடைந்த பாலகணேஷ், தன்னுடைய நண்பர் மனோஜிடம் அனைத்துக் குடும்ப விவரங்களையும் சொல்லி அழுதுள்ளார். அப்போதெல்லாம், பாலகணேஷுக்கு மனோஜ் ஆறுதல் கூறிவந்துள்ளார். 

  பாலகணேஷ்

 கடந்த சில மாதங்களாக, ஞானப்பிரியாவின் நடவடிக்கைகள், அவமானப்படுத்தும் பேச்சு ஆகியவற்றால் பாலகணேஷ் விரக்தியடைந்துள்ளார். இதனால், ஞானப்பிரியாவைக் கொலைசெய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக, அனைத்து முன் ஏற்பாடுகளையும் அவர் செய்துள்ளார். நகைக்காக நடந்த கொலை போல சம்பவத்தைச் சித்திரிக்க முடிவுசெய்து, அதற்காக அவர் காத்திருந்திருக்கிறார். கடந்த 4-ம் தேதி இரவு 11 மணியளவில் பாலகணேஷுக்கும் ஞானப்பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டிலிருந்த சுத்தியலால் ஞானப்பிரியாவின் பின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டுள்ளது. அப்போது, ஞானப்பிரியா சத்தம் போடாமலிருக்க, அவரது வாயைப் பொத்தியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட,  கோயிலிலிருந்து எடுத்து வந்த கயிற்றால் ஞானப்பிரியாவின் கை, கால்களைக் கட்டிவிட்டு, போனில் மனோஜிக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்பேரில், அவரும் நள்ளிரவு 12 மணியளவில் அங்கு வந்திருக்கிறார். அவரிடம் ஞானப்பிரியாவின் தாலிச் செயின் உள்பட 15 சவரன் நகைகளை எடுத்துக்கொடுத்த பாலகணேஷ், தன்னையும் துணியால் கட்டி கழிவறையில் போட்டுவிட்டுச் செல்லுமாறு தெரிவித்திருக்கிறார். அதன்படி செய்த மனோஜ், அங்கிருந்து வீட்டுக்குச் சென்று, நகைகளை வீட்டின் பூஜை அறையில் உள்ள சாமி சிலைகளுக்கு அடியில் வைத்துவிட்டார்.

  பாலகணேஷ் நண்பர் மனோஜ்

ஞானப்பிரியாவின் இறுதிச்சடங்கின்போது, போலீஸாருக்கு சந்தேகம் வராதப்படி பாலகணேஷ், மனோஜ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்தச் சமயத்தில்தான் ஞானப்பிரியாவின் ரத்தத் துளிகள், பாலகணேஷின் கைரேகைகள், விசாரணையில் அவர் தெரிவித்த முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், சி.சி.டி.வி. கேமரா பதிவுகள், போன் கால் ஹிஸ்டரி ஆகியவை பாலகணேஷ் மற்றும் மனோஜை எங்களிடம் காட்டிக் கொடுத்துவிட்டது. இதையடுத்து இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்". என்றார்.

இணை கமிஷனர் மகேஷ்வரி கூறுகையில், "சம்பவத்தன்று நள்ளிரவில் பாலகணேஷ், ஞானப்பிரியாவைக் கொலைசெய்துள்ளார்.  போலீஸ் இணை கமிஷனர் மகேஷ்வரிகொலைக்குப் பயன்படுத்திய சுத்தியலை வீட்டின் மாடியில் மறைத்துவைத்துள்ளார். மனோஜிடம் ஞானப்பிரியாவின் நகைகள்குறித்து விசாரித்தபோது, சுவாமி சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். அவர் சத்தியம் செய்த சிலைக்கு அடியிலிருந்துதான் ஞானப்பிரியாவின் நகைகளைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றார். 

 ஞானப்பிரியைவை பாலகணேஷ் கொலை செய்த தகவல்  கிடைத்ததும், அவரது சகோதரர்கள். உறவினர்கள் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். ஆத்திரத்தில் அவர்கள், '' உன்னை நம்பித்தான் கட்டிக்கொடுத்தேன். இப்படிச் செய்துவிட்டாயே பாவி'' என்று கதறினர். தொடர்ந்து, உறவினர்களில் சிலர் அவரை அடிக்கவும் பாய்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அதைத் தடுத்த போலீஸார், ஞானப்பிரியாவின்  உறவினர்கள் மற்றும் சகோதரர்களைச் சமதானப்படுத்தி ஆறுதல் கூறினர். 

கொலை நடந்து ஐந்து தினங்களிலேயே வழக்கை துரிதமாக துப்புதுலக்கிய உதவி கமிஷனர் சங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்துருவை போலீஸ் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.