`அ.தி.மு.க-வை வழிநடத்த ஆள் இல்லையே'- காவிரி மீட்புப் பயணத்தில் திருமாவளவன் வேதனை

``எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம் எனத் தமிழக அமைச்சர் கூறியுள்ளது மனவேதனையைத் தருகிறது. மக்களுக்காகப் போராடும்போது மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசும் அ.தி.மு.க-வினரை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். ஜெயலலிதா இல்லை என்பது இப்போது நமக்கு வேதனையாக இருக்கிறது'' என்று கொந்தளித்தார் தொல்.திருமாவளவன்.

 காவிரி உரிமை மீட்புக்குழு பயணம்

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் காவிரி உரிமை மீட்பு 2-வது குழு 2-ம் நாள் பயணம் தொடங்கினர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.க நிர்வாகிகள் ஆ.ராசா, வி.பி.துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து சாத்தமங்கலம், கள்ளூர் பாலம் வழியாக பயணம் திருமானூர் சென்றது.

 திருமாவளவன்

இதைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் திருவையாறு வழியாக கும்பகோணம் சென்றது குழுவினரின் பயணம். பயணத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன், ”ஒட்டுமொத்த தமிழகமே காவிரி நீருக்காக போராடிக்கொண்டிருக்கும்போது, அதை திசை திருப்பும் வகையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவது வேதனை அளிக்கிறது. இந்தப் போட்டிகளை நடத்த வேண்டாம் என சொல்லவில்லை. தள்ளிப் போடுங்கள் அல்லது வேறு மாநிலங்களுக்கு மாற்றுங்கள் என வலியுறுத்தியும் அதை மீறி நடத்துவது கண்டனத்துக்குரியது. எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம் என தமிழக அமைச்சர் கூறியுள்ளது வேதனையைத் தருகிறது.

நாங்கள் யாருக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். தமிழ் மக்களின் வாழ்வாதாரத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்கள் கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவது வேதனையாக இருக்கிறது. அமைச்சரின் பேச்சு அக்கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும். இது வரலாற்றுப் பிழையாக அமையும். ஜெயலலிதா இல்லை என்பது இப்போது நமக்கு வேதனையைத் தருகிறது. அ.தி.மு.கவை சரியாக வழிநடத்த அரசியல் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்பது தற்பொழுது தெரியவருகிறது.

மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்களே ஒன்று திரண்டு போராடிக்கொண்டிருக்குப்போது மத்திய அரசுக்கு மாநில அரசு துணை போவது மாபெரும் வரலாற்றுக் கரையாக அமைந்துவிடும். மத்திய அரசைக் கண்டித்து நெய்வேலி என்.எல்.சி முற்றுகையிடும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கலந்துகொள்கிறது. இதேபோல் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தும் நிறுவனத்தைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்படும்" எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!