வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (10/04/2018)

கடைசி தொடர்பு:14:37 (10/04/2018)

காவிரி வராததால் ரயில்வே துறைக்கு 130 கோடி வருவாய் இழப்பு! ஏன்?

காவிரிநீர் வராததால் தமிழக விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் ரயில்வே துறைக்கும் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழகத்துக்கு முகவராகச் செயல்படக்கூடிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், காவிரி டெல்டா மாவட்டங்களில் உற்பத்தியாகும் நெல்லைக் கொள்முதல் செய்து, அரவைப் பணிகளுக்காகச் சரக்கு ரயில்கள் மூலமாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவது வழக்கம். இதன்மூலம் ரயில்வே துறைக்கு அதிக அளவில் வருவாய் கிடைத்துவந்தது. நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்வதற்காகத் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய ரயில் நிலையங்களில் சரக்கு கையாளும் மையங்கள் இயங்கி வருகின்றன. 

காவிரி

இந்நிலையில், காவிரிநீர்  சரியான நேரத்துக்கு வராததால் மேற்சொன்ன பகுதிகளில் நெல் உற்பத்தி குறைந்தது. இதையடுத்து, சரக்கு ரயில்களில் நெல்மூட்டைகள் ஏற்றிச் செல்வதும் குறைந்துகொண்டே வருகிறது. 2015 - 16-ம் நிதியாண்டில், ரயில்களில் 607 மெட்ரிக் டன் நெல் ஏற்றிச் செல்லப்பட்டது. இதன்மூலம் தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்துக்கு 45.23 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 2016-17-ம் ஆண்டு 298 மெட்ரிக் டன் நெல் மட்டுமே ஏற்றிச்சென்றதால் 22.34 கோடி ரூபாய்தான் வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு இன்னும் மோசம். 140.77 டன் நெல் மட்டுமே எடுத்துச் செல்லப்பட்டதால், 10.35 கோடி ரூபாய்தான் வருவாய் கிடைத்துள்ளது. 

இதுகுறித்து தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தில் பணியாற்றும் உயர் அலுவலர் ஒருவரிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``பயணிகள் ரயில்களை விடவும், சரக்கு ரயில்கள் இயக்குவதில்தான் ரயில்வே நிர்வாகத்துக்குப் பலவகைகளிலும் அட்வான்டேஜ் அதிகம். ஆனால், இதை எங்களால் தக்கவைத்துக்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. காவிரிநீர் வராததால் கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட நெல் உற்பத்திச் சரிவினால், தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்துக்கு 130 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 -16-ம் ஆண்டு, 607 டன் நெல் மூட்டைகள் கொண்டுசெல்ல 216 சரக்கு ரயில்கள் பயன்படுத்தப்பட்டன. 2016 - 17-ம் ஆண்டு, 298 டன் நெல் மூட்டைகள் கொண்டுசெல்ல 106 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. நடப்பு ஆண்டு நிலைமை இன்னும் மோசமாகி 50 சரக்கு ரயில்களில் 140 டன் நெல்  மூட்டைகள் மட்டுமே கொண்டு செல்லப்பட்டன. இதே நிலை எதிர்காலத்திலும் தொடர்ந்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இயங்கும் சரக்குக் கையாளும் மையங்களை நிரந்தரமாக இழுத்து மூடும் நிலை உருவாகும்'' என்றார். 

''காவிரியில் தண்ணீர் கிடைக்காததால், விவசாயிகளுக்கும் ரயில்வே துறைக்கும் மட்டும் வருவாய் இழப்பு ஏற்படவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது நெல்லைக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவர லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்துவார்கள். இவற்றின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் இதன்மூலம் பயனடைவார்கள். நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்களும், லட்சக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்களும் பயனடைவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர்களில் பெரும்பாலானோர் வேலை இழந்து பெரும் சிரமத்தில் தவிக்கிறார்கள்'' என்கின்றனர், காவிரி கடைமடைப் பகுதி மக்கள்.

காவிரி இல்லாமல் நம் வாழ்வு இல்லை என்ற முழக்கம், நம் காதுகளில் ஒலிக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்