வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (10/04/2018)

கடைசி தொடர்பு:15:44 (10/04/2018)

பலத்த பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் மைதானம் முற்றுகை

முற்றுகை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்பையும் மீறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி விவகாரம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. இந்தப் பிரச்னைகளில் அரசியல் கட்சியினர் மட்டுமன்றி, திரைத்துறையினர், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 

இந்நிலையில், ' காவிரி விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி, சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும்' என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, ஐ.பி.எல் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், '' தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக் கூடாது. இதையும் மீறி நடத்தினால் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம். சென்னையில் உள்ள ஐ.பி.எல் வீரர்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தால், நாங்கள் பொறுப்பல்ல'' எனத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மைதானத்துக்குப் பூட்டுப்போட முயன்ற அவர்களைப் போலீஸார் கைதுசெய்தனர்.

முன்னதாக, ஐ.பி.எல் போட்டியின்போது போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், மைதானத்தைச் சுற்றிலும் சுமார் 4 ஆயிரம் போலீஸார் 3 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி, வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.