மைதிலி, காஜல், செல்வம்..தன்னம்பிக்கையால் முன்னேறிய மாற்றுப் பாலினத்தவர்கள்..! #NationalTransgenderDay

ஏப்ரம் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த நாளை தேசிய திருநங்கையர் தினமாகக் கொண்டாடுகிறார்கள் திருநங்கைகள்.  முகச்சுளிப்பு, கேலி, நிராகரிப்பு, வன்முறை... இதுதான் மூன்றாம் பாலினத்தவருக்கு இந்தச் சமூகம் கொடுத்திருக்கும் தினசரி நிகழ்ச்சி நிரல். இந்த நிகழ்வுகளைத் தகர்த்து, வாழ்க்கையில் தங்களுக்கான நிகழ்ச்சியைத் தாங்களே வடிவமைத்து உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளனர் பல திருநங்கைகள். நர்த்தகி நடராஜ், பிரித்திகா யாஷினி, கிரேஸ் பானு என ஏற்கெனவே உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் தவிர, அதிகம் தெரியாத, தங்களைப் புதிதாக சமூகத்துக்கு வெளிப்படுத்தி வரும் சாதனை திருநங்கைகளை இந்த வாரம் முழுக்க ஒவ்வொரு நாளும் விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன்பு, ஒரு சிறிய அறிமுகப் பட்டியல் இதோ...

1. மைதிலி:

மாற்று பாலினத்தவர் மைதிலி

கேரளாவை பூர்வீகமாகக்கொண்டவர், மைதிலி. பெரும்பாலான திருநங்கைகள் போன்றே பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு, கடை கடையாக ஏறி காசு வசூல் செய்துகொண்டிருந்தவர். தன் தோழி ஜூலி என்பவர் கொடுத்த ஊக்கத்தினால், சிறு வயதில் தான் கற்ற பரதநாட்டியத்தை மீண்டும் கையில்... அல்ல, பாதங்களில் எடுத்தார். இன்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆசிரியையாகப் பரதநாட்டியம் கற்றுக்கொடுக்கிறார். மோகினி ஆட்டம், குச்சுபுடி, கதகளி, ஒடிசி ஆகிய நடனங்களையும் முறையாகக் கற்றுள்ளார்.

 

2. காஜல்:

திருநங்கை காஜல்

திருச்சியைச் சேர்ந்த காஜல், பியூட்டி பார்லர் நடத்திவருகிறார். ஆரம்பத்தில், பெண்களே அவரது பார்லருக்குத் தனியாக வரத் தயங்கி, துணைக்கு ஆளுடன் வருவார்கள். மனம் கலங்கினாலும், குறுகி ஒதுங்கிவிடவில்லை. தனது புன்னகையான பணியாலும் அன்பான பேச்சாலும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றார். இன்று அவர்களது வீட்டுக் கதைகளில் ஆரம்பித்து, விடுகதைகள் வரைக்கும் கலகலவென பேசும் அளவுக்கு எல்லோரின் உள்ளங்களிலும் இடம்பிடித்துள்ளார். இது, அவருடைய தன்னம்பிக்கைக்குக் கிடைத்த பரிசு.

 

3 செல்வம்:

மாற்று பாலினத்தவர் செல்வம்

திருநங்கையாக இருப்பவர்களே பல்வேறு தடைகளை எதிர்கொள்ளும் சூழலில், திருநம்பியாக இந்தச் சமூக கட்டமைப்புக்குள் வாழ்வது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அந்தக் கட்டமைப்புகளை எல்லாம் தகர்த்தெறிந்தவர், செல்வம். காதல், பிரிவு, நம்பிக்கை என அனைத்தையும் சந்தித்தவர். இன்று பல கல்லூரிகளுக்கு திருநம்பிகளைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்குப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

 

4. ஸ்வப்னா:

மாற்று பாலினத்தவர் ஸ்வப்னா

முதன்முறையாக பதிவுத் துறையில் உதவியாளராகப் பணிபுரியும் வாய்ப்பு பெற்ற திருநங்கை. குரூப் - 2 A தேர்வில் இருநூற்றுக்கு 155 கேள்விக்குச் சரியான பதில் அளித்து தேர்வாகி, சாதனைப் படைத்துள்ளார். கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என நிரூபித்துக் காட்டியுள்ளார் ஸ்வப்னா. இவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தற்போது பலரும் கடினமாக அரசுத் தேர்வுக்கு முயற்சி செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

5. ஆராதனா:

மாற்று பாலினத்தவர் ஆராதனா

பல்வேறு தடைகளை எதிர்கொண்டு தன்னுடைய இலக்கை அடைவதற்காகப் போராடிவரும் இளம் திருநங்கை. தன்னுடைய விடாமுயற்சியால் ராணுவப் பயிற்சிக்கு விண்ணப்பித்து, உடல் தகுதித் தேர்வில் பாஸாகி, எழுத்துத் தேர்வுக்காகக் காத்திருக்கிறார். போலீஸ் அல்லது ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். அவரது ஆசை நிறைவேற வாழ்த்துகள்.

 

6. ஜெயா:

மாற்று பாலினத்தவர்

வீட்டில் உள்ளவர்களின் புறக்கணிப்பையும் பொருட்படுத்தாமல், தமிழகத்தின் முதல் திருநங்கை சத்துணவு அமைப்பாளர் என்கிற பெருமையைப் பெற்றவர், ஜெயா. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், நண்பர்களின் உதவியால் இன்று சத்துணவு அமைப்பாளராக, அரசுப் பணியில் சாதனையாளராக வலம்வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!