கிண்டல் செய்த சகவீரர்களை சுட்டுக் கொலை செய்த காவலருக்கு மூன்று ஆயுள் தண்டனை!

கிண்டல் செய்த சகவீரர்களை சுட்டுக் கொலை செய்த காவலருக்கு மூன்று ஆயுள் தண்டனை!

கல்பாக்கம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த விஜயபிரதாப் சிங் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு, மனஅழுத்தம் காரணமாகத் தனது துப்பாக்கியால் சகவீரர்கள் மூன்று பேரைச் சுட்டுக் கொலை செய்தார். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில் அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

மத்திய அரசின் அணுசக்தித் துறை நிர்வாகத்தின்கீழ் அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி ஆகியவை கல்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றன. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் பாதுகாப்புப் படைவீரர்கள், பணிக்குத் தயாராவதற்காக உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) அலுவலகம் உள்ளது. பணிக்குச் செல்வதற்கு முன்பு இங்கு கையெழுத்திட வேண்டும். உடைகளை மாற்றிக்கொள்ளும் வசதி மற்றும் துப்பாக்கியைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஆகியவை இந்த இடத்தில் உண்டு. கடந்த 8.10.2014-ம் தேதி காலை 4.30-க்கு, பாதுகாப்புப் பணிக்குச் செல்வதற்கு முன் அங்குள்ள பேரக்ஸ் விடுதியில் அணிவகுப்புக்காக வீரர்கள் தயாராகிக்கொண்டிருந்தார்கள். பட்டாலியன் மேஜர் பொறுப்பாளர் மோகன் சிங், வீரர்களுக்குப் பணி ஒதுக்கியபின் பேரெக்ஸ் விடுதிக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் சி.ஐ.எஸ்.எஃப். கட்டட முதல் தளத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏட்டு விஜயபிரதாப் சிங், உடைகளை மாற்றிக்கொண்டு பணிக்குத் தயாரானார். பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு, தனக்கு அளிக்கப்படும் 9 எம்.எம். சப் மெஷின்கன் கார்பைன்  துப்பாக்கியைப் பெற்றுக்கொண்டார்.

தொழில் பாதுகாப்பு படை, கல்பாக்கம்

அப்போது அங்கிருந்த அதிகாரிகளுக்கும், இவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. கோபத்துடன் மாடியைவிட்டுக் கீழே இறங்கிவந்த விஜயபிரதாப் சிங், மீண்டும் வேகமாக மாடிக்கு ஏறினார். உள்ளே படுக்கையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த தலைமைக் காவலர் மோகன் சிங் என்பவரைச் சரமாரியாகச் சுட்டுத்தள்ளினார். துப்பாக்கிச் சத்தம் கேட்ட உடனே பணிக்கு வந்திருந்த பாதுகாப்புப் படையினர் அவரைப் பிடிக்கத் தயாராக இருந்தனர். கட்டுக்கடங்காத கோபத்துடன் வெளியேறியவர், அவரை மடக்க நினைத்த கூடுதல் உதவி ஆய்வாளர் கணேசன், சகவீரர்களான கோவர்தன் பிரசாத், பிரதாப் சிங், சுப்புராஜ் ஆகியோர் மீது துப்பாக்கியால் சுட்டார். 20 ரவுண்டுகள் முடிந்த நிலையில் கணேசன், சுப்புராஜ் ஆகியோர் ரத்தவெள்ளத்தில் அங்கேயே துடிதுடிக்க இறந்தனர். வயிற்றில் பாய்ந்த குண்டுகளுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரதாப் சிங் மற்றும் தப்பி ஓடும்போது காலில் அடிபட்ட கோவர்தன் பிரசாத் என்பவரையும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தவறி விழுந்து லேசான காயத்தால் சிகிச்சை பெற்றுவந்த கோவர்தன் பிரசாத் அன்றே டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். இறந்தவர்களின் உடல்கள் கல்பாக்கம் மருத்துவனையில் இருந்து செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு  பிரேதப் பரிசோதனை முடிந்ததும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விஜயபிரதாப் சிங் - கொலை குற்றவாளி

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயபிரதாப் சிங், 1990-இல் தொழில் பாதுகாப்புப் படைவீரராகப் பணியில் சேர்ந்தார். மத்தியப் பிரதேசத்தில், காவலராகவும் பணியாற்றி, 2014 ஜூலை மாதம் பதவி உயர்வு பெற்றவர், கல்பாக்கம் நகரிய பாதுகாப்புப் பணிக்கு மாற்றப்பட்டார். ``தனது குடும்பத்தில் உள்ளவர்களைப் பார்க்க வேண்டும்'' என மோகன் சிங் என்பவரிடம், விஜயபிரதாப் சிங் அந்தச் சமயத்தில் சில தினங்களாகவே விடுமுறை கேட்டதாகத் தெரிகிறது. விஜயபிரதாப் சிங் மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றியபோது, மோகன் சிங் நண்பர்களும் அங்கே பணியாற்றி உள்ளனர். அவர்கள் விஜயபிரதாப் சிங் பற்றிய அவதூறான தகவல்களை மோகன் சிங்குக்குக் கூறியதாகவும், மோகன் சிங் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, விஜயபிரதாப் சிங்கை தினமும் கேலி செய்ததாகவும், அவரைப்போல மற்ற சில அதிகாரிகளும், படைவீரர்களும் சேர்ந்துகொண்டு அவரை அடிக்கடி கிண்டலும் கேலியும் செய்து மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் தெரிகிறது. மத்தியப் பிரதேசத்தில் வேலை செய்த சம்பவம், குடும்பப் பிண்ணனி உள்ளிட்ட ஏதாவது ஒன்றைச் சொல்லி கிண்டல் செய்ததும், அதேநேரத்தில் குடும்பத்தினரைப் பார்க்க விடுமுறை அளிக்காமல் கேலி செய்ததும், தனது ஷிப்ட் முறையை மாற்ற வேண்டும் எனப் பலமுறை கேட்டும், அதை மோகன் சிங் அலட்சியம் செய்துவந்ததாகத் தெரிகிறது. இப்படி மன அழுத்தத்துடன் காணப்பட்ட விஜயபிரதாப் சிங், தொடர்ந்து மோகன் சிங்கின் கேலிக்கு ஆளாக... அவரையும், சக வீரர்களையும் சுட்டுத் தள்ளுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டார் என்று விசாரணையில் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பாதுகாப்புப் படை வீரருக்கும் 60 குண்டுகள் வழங்கப்படும். அதில், தயாராக இருந்த 20 குண்டுகளை மட்டுமே விஜயபிரதாப் சிங் பயன்படுத்தியுள்ளார்.

விஜயபிரதாப் சிங்

கடந்த நான்கு ஆண்டுகளாகச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்டக் கூடுதல் நீதிபதி ராமநாதன், ``இதில் இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது. மூன்று பேரைக் கொலை செய்ததற்காக மூன்று ஆயுள் தண்டனை மற்றும் ஒவ்வொரு கொலைக்கும் 4,000 வீதம் 12,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், மற்றவர்களைக் கொலை செய்ய முயற்சி செய்தமைக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 3,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது” என தீர்ப்பளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!