வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (10/04/2018)

கடைசி தொடர்பு:15:50 (10/04/2018)

`பிரதமர் வரும்போது கறுப்பு உடை அணியுங்கள் மக்களே!' - ஸ்டாலின் வேண்டுகோள்

திருவாரூரில் நடக்கும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மாட்டு வண்டி ஓட்டினார்.

ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்புப் பயணம் இன்று 4வது நாளாக திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது. முன்னதாக திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள தனது வீட்டிலிருந்து கமலாலயக்குளக்கரை வழியாக நடந்து வந்த ஸ்டாலின் பின்னர் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து பவித்திராமாணிக்கத்தில் பள்ளி மாணவர்களைச் சந்தித்தார். 

பின்னர், திருக்கண்ணமங்கை வழியாக அம்மையப்பனில் சிறிது தூரம் நடந்து சென்றார். அங்கு விவசாயிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்களைச் சந்தித்தார். தொடர்ந்து குளக்கரைக்குச் சென்ற ஸ்டாலின் மாட்டு வண்டியில் பயணம் செய்தார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர்.பாலு,  நடிகர் உதயநிதி ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்கள் பூண்டி கலைவாணன் உட்பட கட்சியினர் சென்றனர். நகரப் பகுதிகளைத் தவிர்த்துவிட்டு கிராமங்கள் வழியாகச் செல்லும் ஸ்டாலினுக்குக் கிராமங்களில் உள்ள பெண்கள், மாணவிகள் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து குளக்கரையில் ஸ்டாலின் பேசிய போது,  ``இந்திய காவிரி உரிமை மீட்புப் பயணத்துக்கு இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. காவிரி பிரச்னைக்காக கட்சி பாகுபாடு பார்க்காமல் பொதுவான பிரச்னையாகக் கருதி ஒன்று திரண்டுள்ளனர். தற்போது காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளது. 6 வார காலத்துக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேல்முறையீடு செய்ய வாய்ப்பே இல்லை என்றும் தீர்ப்பு கூறியது. அதை  மத்திய அரசு ஏற்று தீர்ப்பை நிறைவேற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து சட்ட அங்கீகாரம் வாங்கித் தந்திருக்க வேண்டும் அதனை செய்யவில்லை. மாறாக நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது இயலாத காரியம் என்றார். நீர் வளத்துறை அதிகாரிகளும் இதே கருத்தை தெரிவித்தனர்.  

இந்த நிலையில் காவிரியில் நமக்குள்ள உரிமையை மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடைபயணம் மேற்கொண்டுள்ளோம் நேற்றைய தினம் அரியலூரிலிருந்து தொடங்கிய 2வது பயணக்குழுவும் இந்தக் குழுவும் வரும் 12ம் தேதியன்று கடலூர் சென்றடைந்து அங்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 13ம் தேதியன்று சென்னையில் ஆளுநரைச் சந்திப்பதற்கு பேரணியாகச் செல்கின்றோம். ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்ட மத்திய அரசை நேற்றுகூட உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. வழக்கை மே 3ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. இந்தப் பயணத்தோடு போராட்டம் முடிவடைந்துவிடும் என்று நினைக்க வேண்டாம். மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் வரும் 12ம் தேதியன்று பிரதமர் சென்னை வரவுள்ள அன்று தமிழகத்தில் வீடுகள் தோறும் கறுப்புக்கொடி ஏற்றியும் கறுப்பு உடை அணிந்தும் எதிர்ப்புக்களைத் தெரிவிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்தார்.