வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (10/04/2018)

கடைசி தொடர்பு:16:05 (10/04/2018)

`தீர்ப்பை இனியும் மத்திய அரசு அலட்சியப்படுத்த முடியாது' - சொல்கிறார் தம்பிதுரை

தம்பிதுரை

"மத்திய ஆட்சியில் தொடர்ந்து தி.மு.க கட்சி அங்கம் வகித்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியவில்லை. அப்போதே, அவர்கள் செய்திருக்க வேண்டும்" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

கரூரை அடுத்த கருப்பம்பாளையம் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டபின், மக்களவை துணை சபாநாயகர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்பவில்லை. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒருபோதும் முன் வராது என்று, அவர் நினைத்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடவடிக்கை கோரி நாடாளுமன்றத்தை 22 நாள்கள் முடக்கினோம். தற்போது காவிரி விவகாரத்தில் 23 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம். நாடாளுமன்றத்திற்கு இதைவிட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அழுத்தம் தர முடியாது. ட்ரிபுனலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கதான் கூறி உள்ளது. அதைத்தான் நேற்று உச்ச நீதிமன்றமும் சொல்லியிருக்கிறது.

இந்நிலையில், மே 3-ம் தேதிக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் சம்பந்தமில்லை. தி.மு.க-வும் மத்திய அரசில் பல வருடங்கள் ஆட்சியில் இருந்தும் மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியவில்லை. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை இனியும் மத்திய அரசு அலட்சியப்படுத்த முடியாது. காலம் தாழ்த்தாமல் அவர்கள் காவிரி மேலாண்மை அமைத்தே தீர வேண்டும். அதற்காக, நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்றார்.